Microsoft Teams: டீம்ஸ் செயலியை யூஸ் பண்றீங்களா.. அப்போ உங்களுக்குத் தான் இந்தத் தகவல்!

மைக்ரோசாப்ட் டீம்ஸ் வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட இருந்த மிகப்பெரிய ஹேக்கிங் முயற்சியை, அந்த நிறுவனம் வெற்றிகரமாகத் தடுத்திருக்கிறது.

Microsoft Teams

இன்றைய சூழலில் மீட்டிங்குகள் தொடங்கி பல்வேறு அலுவலக வேலைகளும் ஆன்லைனிலேயே நடக்கின்றன. அந்தவகையில் அலுவலக மீட்டிங்குகளுக்கென்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் டீம்ஸ் செயலியை உருவாக்கியிருக்கிறது. பல்வேறு அம்சங்கள், வசதிகளுடன் உருவாகியிருக்கும் இந்த செயலியை உலகம் முழுவது கோடிக்கணக்கானோர் அன்றாடம் பயன்படுத்துகின்றனர்.

ஆன்லைனில் இப்படியான பயன்பாடுகளைச் செய்வோர்களைக் குறிவைத்து சைபர் ஹேக்கிங் குழுக்கள் மோசடி செய்ய முயற்சிப்பதுண்டு. அப்படியான ஒரு குழுதான் Vanilla tempest. இந்தக் குழுவினர் மைக்ரோசாப்ட் டீம்ஸைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து ஹேக் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். டீம்ஸ் வசதியைப் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் உள்ளிட்ட தகவல்களைத் திருடுவதற்காக இந்தக் குழு திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக, Rhysida என்கிற ரேன்சம்வேரை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரிஜினல் சாப்ட்வேர் போலவே இருக்கும் இந்த ரேன்சம்வேர்களால் பாதிக்கப்பட்டிருந்த 200 டிஜிட்டல் கீ-க்களை மைக்ரோசாப்ட் தொழில்நுட்பக் குழு கண்டறிந்து நீக்கியிருக்கிறது. இதன்மூலம், மிகப்பெரிய ஹேக்கிங் முயற்சியை அந்த நிறுவனம் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

எப்படி செயல்படும்?

டீம்ஸைப் பயன்படுத்துபவர்களின் குறிப்பிட்ட ஃபைல்களை ஹேக் செய்து ஹேக்கர்கள் அதை லாக் செய்துவிடுவார்கள். அந்த ஃபைலை அன்லாக் செய்ய வேண்டுமென்றால், குறிப்பிட்ட அளவு பணத்தைப் பிணைத் தொகையாக அளிக்க வேண்டும் என்று அச்சுறுத்துவார்கள்.

அப்படி அளிக்கவில்லை என்றால், அந்த ஃபைலை மொத்தமாக அழித்துவிடுவோம் அல்லது ஆன்லைனில் கசிய விடுவோம் என்று மிரட்டுவார்கள். இதனால், பெரும்பாலானவர்கள் அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து பணத்தைக் கொடுத்து ஃபைலை அன்லாக் செய்துகொள்வார்கள். ஆனால், மைக்ரோசாப்டின் இந்த முயற்சியால் இது தடுக்கப்படுகிறது.

Leave a Comment