latest news
இதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும்.. சியோமி இந்தியாவின் சூப்பர் அறிவிப்பு!
சியோமி இந்தியா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் வாரண்டியை நீட்டித்து இருக்கிறது. புதிய அறிவிப்பை சியோமி இந்தியா நிறுவனம் தனது டிஸ்கார்டு தளத்தில் தெரிவித்து இருக்கிறது. இதே தகவல் சியோமி இந்தியாவின் டுவிட்டர் போன்ற இதர சமூக வலைதளங்களில் இடம்பெறவில்லை.
புதிய அறிவிப்பின் படி வாரண்டி நீட்டிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்களை சியோமி தெரிவித்து இருக்கிறது. புதிய வாரண்டியின் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை பழைய ஸ்மார்ட்போன் வைத்திருப்போர், அதில் ஏற்பட்டு இருக்கும் சிலவகை கேமரா அல்லது மதர்போர்டு சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்து கொள்ளலாம். திடீரென ஸ்மார்ட்போன்களின் வாரண்டி நீட்டிக்கப்பட்டதற்கான காரணம் மர்மமாகவே உள்ளது.
சில சாதனங்களில் பிழை ஏற்பட்டு இருப்பதை சியோமி கண்டறிந்திருக்கலாம். இதன் காரணமாகவே இத்தகைய அறிவிப்பு வெளியாகி உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் சியோமி நிறுவனம் இந்த வாரண்டி மூலம் இலவச சர்வீஸ் வழங்குவதாகவும் கூறப்படுகிறது. காரணம் எதுவாயினும், இது பயனர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாகவே இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் பிரச்சினைகள் கொண்ட சாதனங்களை பயன்படுத்துவோர், இந்த அறிவிப்பின் மூலம் பயன்பெற முடியும்.
தற்போது வரை சியோமி நிறுவனம் புதிய வாரண்டி நீட்டிப்பு பற்றிய தகவலை தனது சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை. எனினும், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
வாரண்டி நீட்டிக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள்:
சியோமி Mi 11 அல்ட்ரா, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 10 மற்றும் போக்கோ X3 ப்ரோ போன்ற மாடல்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை வாரண்டி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றிய தகவலை லீக்ஸ்டர் டெபாயன் ராய் கண்டறிந்து தெரிவித்தார்.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் சாதனங்களை பயன்படுத்துவோர் புதிய வாரண்டியை பெற முடியும். இத்துடன் செல்ஃபி கேமரா மற்றும் மதர்போர்டு சார்ந்த பிர்ச்சினைகளை இந்த வாரண்டி மூலம் சரிசெய்து கொள்ளலாம். ரூட் செய்யப்பட்ட சாதனங்கள், திர்வங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மாடல்கள், உடைந்த நிலையில் இருக்கும் மாடல்கள் மற்றும் உடைந்த நிலையில் இருக்கும் கேஸ்களை கொண்ட சாதனங்களுக்கு இந்த வாரண்டி பொருந்தாது.
வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள சியோமி சர்வீஸ் செண்டர் சென்று வாரண்டியை பெற்றுக் கொள்ளலாம். அங்கு வாடிக்கையாளர்கள் தங்களது சாதனத்தின் இன்வாய்ஸ்-ஐ சமர்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். புதிய வாரண்டியின் கீழ் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய சியோமி எவ்வித கட்டணமும் வசூலிக்காது.