பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் எஸ். ராமதாஸ், தனது மகன் மற்றும் கட்சியின் தலைவரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ்-ஐ நேரடியாகத் தாக்கிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித் தலைமை மற்றும் சின்னம் குறித்த மோதலில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குப் பிறகு, இந்த கடுமையான வார்த்தைகள் வெளிவந்துள்ளன. பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், உணர்ச்சிவசப்பட்ட நிலையில்
“உன் பாச்சா பலிக்காது… என் உழைப்பை விட்டுக்கொடுக்க முடியாது. தலைவர் பதவிக்கு அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இப்போது அவர் என்னோடு மோத நினைக்கிறார். ஆனால் அது உன்னால் முடியாது, உன் பாச்சா பலிக்காது. உன்னுடைய கூட்டங்கள் காசு கொடுத்துக் கூட்டப்பட்டவை. ஆனால், என்னைப் பார்க்க வரும் மக்கள் உண்மையானவர்கள். மக்கள் என் பக்கமே உள்ளனர்”.
“46 ஆண்டுகளாக நான் சிந்திய வியர்வை வீணாகப் போய்விடக் கூடாது. நான் செய்த தவறுகள் உன்னைப் படிக்க வைத்தது, உன்னை மருத்துவர் ஆக்கியது. இப்போது என் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. நீ தேர்தல் ஆணையத்தில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால் இங்கு, இந்த மக்கள் முன்னிலையில், நீதி, நியாயம்தான் வெற்றி பெறும்.”
தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக நீடிப்பதாகக் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், இந்தக் கூற்றுகள் ராமதாஸ் தரப்பின் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. கட்சியை மீட்டெடுப்பதில் தனது போராட்டத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்ற உறுதியை இந்தச் செய்தி மூலம் பாமக நிறுவனர் வெளிப்படுத்தியுள்ளார்.