அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் மீது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சுமார் 19 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கான விண்ணப்பங்களை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் மறுத்துள்ளது.
இந்தத் தடை உத்தரவு, அந்நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு கிரீன் கார்டு (Green Card) மூலம் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பை மறுக்கிறது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் தொடர்ந்து வசிப்பவர்களைக் கைது செய்யவும், நாடு கடத்தவும் ட்ரம்ப் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தடை விதிக்கப்பட்ட நாடுகள்:
அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற ட்ரம்ப் நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ள 19 நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:
”ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடார், ஈக்வடோரியல் கினி, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புரூண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா”.
இந்த நாடுகளின் பட்டியலில், அரசியல் ஸ்திரமின்மை, பயங்கரவாதம் மற்றும் மோசமான பொருளாதார நிலைமைகள் உள்ள நாடுகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.
ட்ரம்ப் அரசின் நிலைப்பாடு:
அமெரிக்க எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்துதல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய இலக்குகளாக ட்ரம்ப் நிர்வாகம் வைத்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், அமெரிக்கக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறக் காத்திருந்த இந்த 19 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.