தேமுதிகவை சீண்டினால் சிதறிவிடுவீர்கள்!.. தொகுதிப் பங்கீடு வதந்தியால் கொதித்தெழுந்த பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தேமுதிக-விற்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலால் கடும் அதிருப்தியடைந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வதந்தி பரப்பியவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

அழிவு காலம் தொடங்கிவிட்டது:
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, “தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக-விற்கு வெறும் 6 இடங்கள் எனத் தவறான தகவலை திட்டமிட்டுப் பரப்பிய அந்தக் கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது. அதிகாரப்பூர்வமாக இந்த லிஸ்டை யார் கொடுத்தார்கள்? எதைக் கேட்டுக்கொண்டு ஊடகங்களில் விவாதம் செய்கிறீர்கள்? எங்களின் அனுமதி இல்லாமல் தேமுதிக பற்றிச் செய்திகளை வெளியிடக் கூடாது.”

ஜனவரி 9-ல் முக்கிய அறிவிப்பு:
கூட்டணி குறித்து நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் மேலும் கூறுகையில், “வரும் ஜனவரி 9-ம் தேதி தேமுதிகவின் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. அன்று யாருடன் கூட்டணி என்பதை முறைப்படி அறிவிப்பேன். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

வதந்தியின் பின்னணி என்ன?:
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அதிமுக 170 இடங்களிலும், பாஜக 23, பாமக 23, தேமுதிக 6 இடங்கள் எனப் பட்டியலிடப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலே பிரேமலதாவின் கோபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

தொண்டர்களுக்கு வேண்டுகோள்:
“தேமுதிக எப்போதும் தனது பலத்தை நிரூபிக்கும் கட்சி. யாரோ பரப்பும் வதந்திகளைப் பார்த்துத் தொண்டர்கள் குழப்படைய வேண்டாம். கேப்டன் வழியில் நமது பலம் என்னவென்று தேர்தலின் போது காட்டிவிடுவோம்” என்று அவர் தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தார்.

தேமுதிக-வின் இந்த ஆக்ரோஷமான நிலைப்பாடு அதிமுக மற்றும் பாஜக வட்டாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 9-ம் தேதி தேமுதிக எடுக்கப்போகும் அந்த ‘மெகா’ முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது.

Leave a Comment