latest news
குறைந்த விலையில் 100 கிமீ ரேன்ஜ் வழங்கும் புதிய EV ஸ்கூட்டர் – ஏத்தர் வெளியிட்ட சூப்பர் டீசர்!
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது புதிய ஏத்தர் 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என்றும், முழு சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 100 கிலோமீட்டர்களுக்கும் அதிக ரேன்ஜ் வழங்கும் என்றும் தெரிவித்து இருக்கிறது.
ஜூலை மாதம் முதல் ஏத்தர் 450S மாடலுக்கான முன்பதிவு துவங்க இருக்கிறது. இதன் வெளியீடு எப்போது நடைபெறும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த ஃபேம் 2 மானியம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலையை ரூ. 15 ஆயிரம் வரை அதிகரித்தது. தற்போது ஏத்தர் நிறுவனமும் தனது ஏத்தர் 450X பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு தவிர ஏத்தர் வெளியிட்டு இருக்கும் புதிய டீசரில் ஏத்தர் 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது.
ஏத்தர் 450S மாடல் எண்ட்ரி லெவல் பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்றும் இதன் விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஏத்தர் 450X மாடலை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படும் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
எனினும், புதிய ஏத்தர் 450S மாடலில் சில விலை உயர்ந்த அம்சங்கள் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். விலை உயர்ந்த அம்சங்கள், பிரீமியம் மாடலுக்கானவையாக தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஏத்தர் 450S மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 115 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று IDC சான்று பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கலாம். ஏத்தர் 450S மாடலின் ஸ்டிக்கர் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 என்று ஏத்தர் டீசரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.