குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்தாச்சு.. இனி திமுக ‘நோ சான்ஸ்’ அமித்ஷா காட்டம்..

தமிழகத்தில் நிலவும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்றும், உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்கத் துடிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வாரிசு அரசியலுக்கு நேரடி எச்சரிக்கை:
புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜகவின் ‘தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்’ நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, திமுகவின் வாரிசு அரசியலை மிகக் கடுமையாகச் சாடினார்.

அவர் பேசுகையில், “கருணாநிதி, ஸ்டாலின் எனத் தொடர்ந்த இந்த வாரிசு அரசியலில், இப்போது உதயநிதி ஸ்டாலினை அடுத்த முதலமைச்சராக்க மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். ஸ்டாலின் பாபு அவர்களே.. உங்கள் மகன் உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும் என்பதுதான் உங்கள் ஒரே நோக்கம். ஆனால் இந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது. தமிழக மக்கள் வாரிசு அரசியலைத் தூக்கி எறியும் காலம் வந்துவிட்டது” என்று கர்ஜித்தார்.

2024 தேர்தல் ரகசியம் :
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அமித்ஷா, ஒரு முக்கியமான அரசியல் கணக்கைப் பகிர்ந்துகொண்டார். “2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாகப் போட்டியிட்டன. ஒருவேளை இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டிருந்தால், இன்று திமுக தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அதிமுக – பாஜக கூட்டணி என்பது ஒரு இயல்பான (Natural Alliance) கூட்டணி. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த மெகா கூட்டணி மீண்டும் இணைந்து திமுகவை வீழ்த்தும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்து விரோத போக்கு:
திமுக அரசு இந்துக்களின் கலாச்சாரத்திற்கும் விழுமியங்களுக்கும் எதிராகச் செயல்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் முழுமையாகச் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அடுத்த ஆட்சி:
2026 ஏப்ரலில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அமித்ஷா உறுதியளித்தார். நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சு, தமிழகத்தில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி உருவாவதற்கான தெளிவான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது, இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment