தெருநாய் தொல்லை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்த ஒரு கருத்தை முன்வைத்து, நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா (திவ்யா ஸ்பந்தனா) எழுப்பியுள்ள கேள்வி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பின்னணி என்ன?
தெருநாய்கள் கடிப்பது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “நாய் எப்போது கடிக்க வரும் என்பதை அதன் மனநிலையைப் பார்த்து யாராலும் அறிய முடியாது” என்று கருத்து தெரிவித்திருந்தது. நாய்களின் நடத்தை கணிக்க முடியாதது என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டது.
நடிகை ரம்யாவின் ‘கிடுக்கிப்பிடி’ கேள்வி:
உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ரம்யா, ஆண்களின் மனநிலையுடன் அதனை ஒப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது,
“ஒரு நாய் எப்போது கடிக்க வரும் என்று அதன் மனநிலையை வைத்து அறிய முடியாது என நீதிமன்றம் சொல்கிறது. அதே லாஜிக்கை மனிதர்களுக்கும் பொருத்தினால், ஒரு ஆணின் மனதையும் யாராலும் படிக்க முடியாது. அவன் எப்போது பாலியல் வன்கொடுமை செய்வான், எப்போது கொலை செய்வான் என யாருக்கும் தெரியாது. அப்படியானால், பாதுகாப்பு கருதி எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்கலாமா?”
வெடித்தது சர்ச்சை:
ரம்யாவின் இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் குவியத் தொடங்கின. “நாய்களுடன் ஆண்களை ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த ஆண்களையும் கொச்சைப்படுத்துவது தவறு” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஆண்களின் மனநிலையை யாராலும் கணிக்க முடிவதில்லை என்ற ரம்யாவின் வாதம், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்துவதாகவே உள்ளது” என ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கர்நாடகாவில் தெருநாய்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த ரம்யா, விலங்குகள் நல ஆர்வலராக அறியப்படுபவர். இந்நிலையில், நாய் கடித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஆண்களின் வன்கொடுமை குற்றங்களோடு ஒப்பிட்டு அவர் பேசியிருப்பது, ‘பெண்ணியம்’ மற்றும் ‘மனித உரிமைகள்’ குறித்த புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
தற்போது ரம்யாவின் இந்த ‘ட்வீட்’ வைரலாகி வரும் நிலையில், இது குறித்துப் பல அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.