எங்களுக்குள்ள நடக்குறது பங்காளி சண்டைதான்.. டெல்லியை நம்பி பல்டி அடித்த தினகரன்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து ஆதரவு கடிதம் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரிவாகப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஒரு நல்லாட்சியை உருவாக்கவும், தீயசக்தி என்று எங்களால் அடையாளப்படுத்தப்படும் திமுகவை வீழ்த்தவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய முடிவெடுத்துள்ளோம். இதற்காகத் தமிழகம் வந்துள்ள பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து எங்களது ஆதரவை உறுதி செய்ய இருக்கிறோம்,” என்றார்.

பங்காளி சண்டை :
கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமியை “துரோகத்தின் அடையாளம்” என்று மிகக் கடுமையாக விமர்சித்து வந்த தினகரன், இன்று தனது பேச்சில் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்தார். அதிமுக உடனான மோதல் குறித்துக் கேட்டபோது, “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடப்பது வெறும் பங்காளி சண்டைதான்.

ஒரு வீட்டுக்குள் அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வராதா? அதேபோல்தான் இதுவும். விட்டுக்கொடுத்தவர்கள் இதுவரை கெட்டுப்போனதாகச் சரித்திரம் இல்லை. பொது எதிரியை வீழ்த்த வேண்டிய சூழலில் சில கசப்பான சம்பவங்களை மறந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்,” என விளக்கமளித்தார்.

துரோகத்தை எப்படி ஏற்க முடியும்?
மேலும், “துரோகத்தை எப்படி ஏற்க முடியும்?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியல் என்பது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கானது அல்ல. அது மக்களின் நலனுக்கானது. துரோகங்களை விட தமிழகத்தின் எதிர்காலமே முக்கியம் என்று கருதுகிறேன். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்,” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

டிடிவி தினகரனின் இந்தத் திடீர் முடிவு, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிதறிக் கிடக்கும் அதிமுக வாக்குகள் மீண்டும் ஓரணியில் திரள இது வழிவகுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் மேடையேறுவது தற்போது உறுதியாகியுள்ளது.

Leave a Comment