கணவனை பிரிச்சதுக்கு காதலி கொடுத்த கொடூர ‘கிஃப்ட்’!.. கர்னூலில் ஒரு ரத்த சரித்திரம்..

ஆந்திர மாநிலம் கர்நூலில், தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட காதலனைப் பழிவாங்க, அவரது மனைவிக்கு எச்ஐவி (HIV) தொற்றை ஊசி மூலம் செலுத்திய பெண்ணின் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முறிந்து போன காதலும்.. மூண்ட பகையும்!
கர்நூல் நகரைச் சேர்ந்த வசுந்தரா (34) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதல் இடையில் முறிந்த நிலையில், அந்த மருத்துவர் ஸ்ராவணி என்ற மற்றொரு பெண் மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டார். ஸ்ராவணி கர்நூலில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முன்னாள் காதலன் மற்றொரு பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டு வசுந்தரா ஆத்திரமடைந்துள்ளார்.

செவிலியர் குடும்பத்துடன் கூட்டுச் சதி!
அவர்களைப் பிரிக்க நினைத்த வசுந்தரா, ஒரு கொடூரத் திட்டத்தைத் தீட்டினார். இதற்கு அடோனி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் ஜோதி (40) மற்றும் ஜோதியின் இரண்டு மகன்களான ஜஸ்வந்த் (20), ஸ்ருதி (19) ஆகியோரைத் தனது சதித் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.

திட்டமிட்ட விபத்து… ஆட்டோவில் நடந்த விபரீதம்!
கடந்த ஜனவரி 9-ம் தேதி மதியம், பணி முடிந்து ஸ்ராவணி தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். விநாயக் காட் அருகே ஸ்ராவணியின் வாகனத்தின் மீது ஜஸ்வந்த் மற்றும் ஸ்ருதி திட்டமிட்டு மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதில் ஸ்ராவணி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அங்கு உதவி செய்வது போல வந்த வசுந்தரா மற்றும் ஜோதி, ஸ்ராவணியை ஒரு ஆட்டோவில் ஏற்றினர். ஆட்டோவிற்குள் வைத்து, மறைத்து வைத்திருந்த எச்ஐவி வைரஸ் கலந்த ரத்தத்தை ஸ்ராவணியின் உடலில் வசுந்தரா ஊசி மூலம் செலுத்தியுள்ளார்.

ப்ரிட்ஜில் ரகசியமாக வைக்கப்பட்ட ரத்தம்!
பாதிக்கப்பட்ட ஸ்ராவணியின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்ஐவி நோயாளிகளிடமிருந்து, “ஆராய்ச்சிக்குத் தேவைப்படுகிறது” எனப் பொய் சொல்லி ரத்த மாதிரிகளை வசுந்தரா சேகரித்துள்ளார்.

அந்த ரத்தத்தை தனது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) பல நாட்களாகப் பாதுகாத்து வைத்துள்ளார். பின்னர் சரியான தருணம் பார்த்து, விபத்து நாடகம் நடத்தி அந்த ரத்தத்தை ஸ்ராவணியின் உடலில் செலுத்தியுள்ளார்.

நிம்மதி தரும் மருத்துவத் தகவல்:
இந்த விவகாரத்தில் ஒரு முக்கியத் தகவலாக, ரத்த மாதிரிகள் பல நாட்களாகப் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்ததால், அதில் இருந்த எச்ஐவி வைரஸ்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், இதனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்குத் தொற்று ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த மருத்துவப் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தற்போது வசுந்தரா, செவிலியர் ஜோதி உட்பட 4 பேரையும் கர்நூல் போலீசார் கைது செய்து 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Comment