பழைய நோட்டு வச்சிருக்கீங்களா? உஷார்!.. நெல்லை விவசாயிக்கு நடந்த ‘ஆன்லைன்’ ஆப்பு..

பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி, நெல்லையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது சேமிப்புப் பணத்தை மோசடி கும்பலிடம் பறிகொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசையைக் காட்டிய ‘அஞ்சு ரூபாய்’ விளம்பரம்:
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டுள்ளது. அதில், “உங்களிடம் டிராக்டர் சின்னம் பொறித்த பழைய 5 ரூபாய் நோட்டு இருக்கிறதா? அதை எங்களிடம் கொடுத்தால் கைமேல் 10 லட்சம் ரூபாய் தருவோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை உண்மை என நம்பிய அந்த விவசாயி, விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.

‘வரி’ என்ற பெயரில் நூதன மோசடி:
மறுமுனையில் பேசிய மர்ம நபர்கள், அந்த பழைய 5 ரூபாய் நோட்டைப் பெரும் தொகைக்கு விற்க வேண்டுமென்றால், அதற்கு ‘ஜிஎஸ்டி’ (GST) மற்றும் ‘பதிவு கட்டணம்’ (Registration Fee) செலுத்த வேண்டும் என ஆசை காட்டியுள்ளனர்.

“முதலில் கொஞ்சமா பணம் கட்டுங்க.. அப்புறம் மொத்தமா 10 லட்சம் உங்க அக்கவுண்ட்டுக்கே வந்திரும்” என்று அவர்கள் சொன்னதை நம்பி, அந்த விவசாயி சிறுகச் சிறுகச் சேர்த்த ரூ.30,000 பணத்தை அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

பணமும் போச்சு.. ஆளும் போச்சு!
பணத்தை அனுப்பிய பிறகு, 10 லட்சம் ரூபாய் வரும் என விவசாயி காத்திருந்துள்ளார். ஆனால், பணம் வரவில்லை. மீண்டும் அந்த எண்களைத் தொடர்பு கொண்டபோது, அவை ‘சுவிட்ச் ஆஃப்’ (Switch Off) செய்யப்பட்டிருந்தன. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் விசாரணை:
விவசாயியின் புகாரைப் பெற்றுக் கொண்ட சைபர் கிரைம் போலீஸார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வாங்குவதாகக் கூறி ஆன்லைனில் வரும் விளம்பரங்களை மக்கள் நம்ப வேண்டாம். தெரியாத நபர்களுக்குப் பணத்தை அனுப்ப வேண்டாம்” எனப் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment