பங்கு கேட்டால் எப்படி சதியாகும்: திமுகவுடன் மல்லு கட்டும் மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நீடித்தாலும், வெற்றிக்குப் பின் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் நிர்வாகிகள் முன்வைத்து வருகின்றனர்.

தமிழக அரசியலில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வலுவான அங்கமாக நீடித்து வருகிறது. இருப்பினும், வரும் தேர்தலில் கூட்டணி கட்சியான திமுகவிடம் புதிய நிபந்தனைகளை முன்வைக்க காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்புத் தலைவர்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் திமுகவுடன் தேர்தல் கூட்டணியில் மட்டுமே காங்கிரஸ் இருந்து வந்துள்ளது. ஆனால், வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில், தமிழக அமைச்சரவையில் காங்கிரஸிற்கு உரிய இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற ‘ஆட்சியில் பங்கு’ கோரிக்கையைச் சில முக்கியத் தலைவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் சமீபத்தில் பேசிய போது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்று கூறியிருந்தார். மேலும் கூட்டணியை பிரிக்க சிலர் சதி செய்வதாகவும் கூறியிருந்தார்.

முதல்வரின் இந்த கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் , கூட்டணி ஆட்சியா அல்லது தனித்து ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக இன்றும் தனது எக்ஸ் பக்கத்தில் தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் எப்படி சதியாகும் என்று கூறியுள்ளார்.

திமுக தரப்பைப் பொறுத்தவரை, இதுவரை தனித்து ஆட்சி அமைப்பதையே முன்னிறுத்தி வந்துள்ளது. ஆனால், வரும் தேர்தலில் வலுவான எதிர்கட்சிகளை எதிர்கொள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு மிகவும் அவசியமாகிறது. இத்தகைய சூழலில், காங்கிரஸின் ‘ஆட்சியில் பங்கு’ கோரிக்கையை திமுக தலைமை எவ்வாறு கையாளப் போகிறது என்பது வரும் மாதங்களில் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளின் போது தெரியவரும்.

Leave a Comment