குவைத்: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட அதிரடி ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் 4 வீரர்களின் அடையாளங்களை பென்டகன் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சத்தம் இன்றி வந்த சாவு: நடந்தது என்ன?
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில், குவைத்தின் போர்ட் ஷுவைபா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ராணுவக் கட்டுப்பாட்டு அறையைக் குறிவைத்து ஈரான் ஆதரவு அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தினர். வழக்கமாக எதிரி நாட்டு விமானங்கள் அல்லது ட்ரோன்கள் ஊடுருவினால் ஒலிக்க வேண்டிய ‘அபாய சங்கு’ (Siren) இந்த முறை ஒலிக்கவில்லை. இதனால், வீரர்கள் பதுங்கு குழிகளுக்குச் செல்லக் கூட நேரமில்லாமல் அந்த இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகினர்.
வெடிவிபத்தின் தாக்கம் எந்தளவுக்கு இருந்தது என்றால், ராணுவக் கட்டிடத்தின் சுவர்கள் வெளிப்புறமாகத் தூக்கி வீசப்பட்டதாக சிஎன்என் (CNN) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீரர்களின் அடையாளம் வெளியீடு
உயிரிழந்தவர்களில் நான்கு பேர் அயோவாவின் 103வது சஸ்டைன்மென்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள்:
கேப்டன் கோடி ஏ. கோர்க் (புளோரிடா)
சார்ஜென்ட் நோவா எல். டைட்ஜென்ஸ் (நெப்ராஸ்கா)
சார்ஜென்ட் நிக்கோல் எம். அமோர் (மினசோட்டா – பெண் வீரர்)
ஸ்பெஷலிஸ்ட் டெக்லான் ஜே. கோடி (அயோவா)
மற்ற இரு வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டாலும், அவர்களின் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார். “நாகரிகத்திற்கு எதிராகப் போர் தொடுத்துள்ள பயங்கரவாதிகளுக்கு அமெரிக்கா தகுந்த பாடம் புகட்டும்” என அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் கூறுகையில், ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையில் இந்த வீரர்கள் தங்களின் உயர்ந்த தியாகத்தைச் செய்துள்ளதாக உருக்கத்துடன் தெரிவித்தார்.
பாதுகாப்பு குளறுபடியா?
வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஒரே ஒரு ட்ரோன் எப்படி ஊடுருவியது என்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். எனினும், பாதுகாப்பற்ற தற்காலிக இடத்தில் இவ்வளவு வீரர்களைத் தங்க வைத்தது அதிகாரிகளின் தவறு என்ற விமர்சனமும் ராணுவத்திற்குள் எழுந்துள்ளது.