இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா அதிரடி! ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: 101 பேர் நிலை என்ன?

மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் பதற்றம் தற்போது இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் தாக்குதல், தற்போது ஒரு மாபெரும் உலகப்போருக்கான (World War 3) தொடக்கமாக இருக்குமோ என்கிற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரான் சிதைவு – 500 பேர் பலி!

ஈரான் தலைநகர் தெஹ்ரானை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில், அந்நாட்டின் முக்கியக் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் இதுவரை ஈரானைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதல்:

போரின் உச்சக்கட்டமாக, இலங்கை அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்கா குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கடற்படை வீரர்கள் இருந்த அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கி வருகிறது. இதில் 31 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 101 வீரர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

வளைகுடா நாடுகளில் ஈரான் பதிலடி!

தங்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அபுதாபி ஆகிய வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

விமான நிலையங்கள் மூடல் – பயணிகள் அவதி:

போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் பாதுகாப்பு கருதி வளைகுடா நாடுகளின் பெரும்பாலான சர்வதேச விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான சர்வதேசப் பயணிகள் விமான நிலையங்களிலேயே தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் உலகளாவிய வர்த்தகமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொடர் தாக்குதல்கள் வல்லரசு நாடுகளுக்கிடையேயான நேரடி மோதலாக உருவெடுத்துள்ளதால், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் மிகுந்த கவலையடைந்துள்ளன.

Leave a Comment