latest news
என்ன மாம்பழத்திலும் கெமிக்கலா?.. அதை எப்படி கண்டுபிடிப்பது?..
வெயில் காலம் என்றாலே மாம்பழம் சீசன் தொடங்கிவிட்டது என்றுதானே அர்த்தம். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் பெயரை சொன்னாலே நாக்கில் எச்சில் ஊறும். அப்படிப்பட்ட மாம்பழத்தில் சுவையோடு மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. மாம்ம்பழத்தில் கொழுப்பு, சோடியத்தின் அளவுகள் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இதில் விட்டமின் பி5, ஏ, சி என பல்வேறு ஊட்டசத்துகள் மிகுதியாக உள்ளன. இது உடலில் ஏற்படும் இரத்த அழுத்ததினை சரிசெய்வது மட்டுமல்லாமல் நமது உடம்பில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைக்கின்றது.
மாம்பழத்தை பழுக்க வைக்கும் முறை:
வெயில் காலங்களில் மாம்பழ விற்பனை அதிகமாக இருப்பதால் அதனை சீக்கிரமாக பழுக்க வைக்க சில ரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறான மாம்பழங்களை சாப்பிடுவதால் நமது கண்ணுக்கே தெரியாமல் பல நோய்களால் அவதிபடுகின்றோம்.
கால்சியம் கார்பைடு எனும் கெமிக்கல் காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் சேர்ந்து அசிட்டிலீன் எனும் ஒரு வகை வாயுவை வெளியிடுகிறது. இந்த வாயுவானது மாம்பழத்தை மிக சீக்கிரமாக பழுக்க வைக்கின்றது.
மாம்பழம் வாங்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியது:
நாம் மாம்பழங்களை வாங்கும் பொழுது அதன் வண்ணங்களை கவனிக்க வேண்டும். ரசாயன பொருட்களை கொண்டு பழுக்க வைக்கபடும் மாம்பழங்கள் ஒரே சீராக பச்சையாக இல்லமால் அங்கங்கு பச்சையாக காணப்படும். இதனை வைத்து நல்ல மாம்பழங்களை நாம் கண்டறியலாம்.
மாம்பழத்தின் அளவு:
மாம்பழத்தின் அளவை வைத்தும் அந்த மாம்பழத்தின் தன்மையை அறியலாம். ரசாயன மாம்பழங்கள் சற்று சிறிய வடிவில் இருக்கும். மேலும் மாம்பழத்தில் வெள்ளை அல்லது நீல நிற புள்ளிகள் இருந்தாலும் அது இரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழம் என்பதை அறியலாம்.
தண்ணீர் முலம் அறிவது எப்படி:
மாம்பழங்களை தண்ணீரில் போடும் பொழுது சில மாம்பழங்கள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும் மற்றவை தண்ணீரின் அடியில் செல்லும். எந்தெந்த மாம்பழங்கள் தண்ணீரில் மிதக்கின்றனவோ அவை இரசாயனங்கள் மூலமாக பழுக்க வைக்கப்பட்டவை என நாம் கண்டுகொள்ளலாம். மேலும் நாம் பழத்தை அமுக்கி பார்ப்பதின் மூலமும் மாம்பழங்களின் தன்மையை அறியலாம். இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் அமுக்கி பார்க்கும் பொழுது சற்று மென்மையாக இருக்கும். ஒருவேளை கெமிக்கல் மாம்பழங்கள் என்றால் அவை சரிசமமாக மென்மையாக இல்லாமல் ஆங்காங்கே கடினமாக இருக்கும்.
இவ்வாறாக நாம் மாம்பழங்களை அடையாளம் காணலாம். எனவே இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை வெயில் காலத்தில் உண்டு நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவோம்.