latest news
கேமிங் மோகம்.. தாயின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 52 லட்சம் காலி செய்த 13 வயது சிறுமி!
சிறுவர்கள் ஆன்லைன் கேமிங் மீது அந்த அளவுக்கு அடிமைகளாகி வருகின்றனர் என்பதை உணர்த்தும் மற்றும் ஓர் சம்பவம் சீனாவில் அரங்கேறி இருக்கிறது. 13 வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் கேமிங் மோகம் காரணமாக தனது தாயின் வங்கி கணக்கில் இருந்து 52 லட்சம் ரூபாயை செலவு செய்து இருக்கிறார். இதன் காரணமாக தாயின் வங்கி கணக்கில் இருப்பு தொகை 5 ரூபாயாக குறைந்தது.
சம்பவத்தை நிகழ்த்திய 13 வயது சிறுமி தாயின் டெபிட் கார்டு மூலம் ஆன்லைன் டூல் மற்றும் கேம்களில் விற்பனையாகும் இன்-கேம் பர்சேஸ்களுக்கு பணம் செலுத்தி இருக்கிறார். சீன மதிப்பில் இவர் தனது தாயின் வங்கி கணக்கில் இருந்து 4 லட்சத்து 49 ஆயிரத்து 500 CNY தொகையை செலவிட்டார். இது இந்திய மதிப்பில் ரூ. 52 லட்சம் ஆகும்.
பள்ளி நேரத்தில் அதிகநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியதை வைத்து, பள்ளி ஆசிரியை சிறுமியிடம் விசாரணை செய்தார். மேலும் சிறுமியின் ஆன்லைன் கேமிங் மோகம் பற்றி அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். அப்போது சிறுமியின் தாய் வாங் தனது வங்கி கணக்கை சரிபார்த்தார். அப்போது அதில் பணம் எடுக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவர் அதிர்ந்து போனார்.
பிறகு, சிறுமியின் தந்தை தனது மகளிடம் பணத்தை எப்படி செலவு செய்தாய் என கேட்டிருக்கிறார். அப்போது, வங்கியில் இருந்து பணத்தை கொண்டு ஆன்லைன் கேம்களை வாங்கியும், இன்-கேம் பர்சேஸ்களை மேற்கொண்டதாக சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார். கேம்களை வாங்க தனக்காக ஒரு லட்சம் யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 11 லட்சத்து 61 ஆயிரத்து 590 செலவிட்ட சிறுமி, தனது வகுப்பறை நண்பர்கள் பத்து பேருக்கு ஆன்லைன் கேம்களை வாங்கி கொடுத்துள்ளார்.
தனக்கு வீட்டில் கிடைத்த டெபிட் கார்டை தனது ஸ்மார்ட்போனுடன் இணைத்து, இவ்வாறு செய்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். டெபிட் கார்டின் பாஸ்வேர்டை சிறுமிக்கு அவரின் தாயார் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார். அவசர கால பயன்பாட்டிற்கு மட்டும் இதனை பயன்படுத்த வேண்டும் என்று தாய் வலியுறுத்தி இருந்தார். ஆனாலும், சிறுமி அந்த கார்டை கொண்டு கேம் மற்றும் இன்-கேம் பர்சேசிங் செய்து இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஏற்பட நட்டத்திற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்ற தலைப்பில் இணையவாசிகள் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் குடும்பத்தாரின் அலட்சியத்தை நெட்டிசன்கள் குற்றம்சாட்டும் நிலையில், மறுபக்கம் சிறுமி எப்படி இவ்வளவு அலட்சியமாக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.