latest news
பயனர் விவரங்களை சேகரித்த விவகாரம் – புதிய சர்ச்சையில் சிக்கிய ரியல்மி!
ரியல்மி நிறுவனம் பயனர் விவரங்களை சேகரித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரியல்மி யுஐ 4.0-இல் தானாக செயல்படுத்தப்பட்டு ஆப்ஷன் பயனர் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக கூறப்பட்டது. ரியல்மி நிறுவன ஸ்மார்ட்போன்களின் ஏராளமான மாடல்களில் ரியல்மி யுஐ 4.0 வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் இல்லை.
இந்த பிரச்சினை பற்றிய தகவல்களை ரியல்மி பயனர்கள் டுவிட்டர் தளத்தில் தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த குற்றச்சாட்டு குறித்து அரசாங்கம் ஆய்வு செய்யும் என்று தெரிவித்து இருக்கிறார்.
ரியல்மி ஸ்மார்ட்போன்களில் தானாக செயல்படுத்தப்பட்டு இருக்கும் “Enhanced intelligent Services” எனும் அம்சம் பற்றி டுவிட்டர் பயனர் ஒருவர் தெரிவித்து இருந்தார். இந்த அம்சம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு, நீங்கள் எப்படி சாதனத்தை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை வைத்து சாதனத்தின் அம்சங்களை ஆப்டிமைஸ் செய்யும். ஆனால் மற்ற அம்சங்களை போன்றில்லாமல், இது பேட்டன் மற்றும் பிரிஃபரன்ஸ்களை ஆராய்ச்சி செய்யும்.
இந்த அம்சத்திற்கான விவர குறிப்பில், இது உங்கள் சாதனத்தின் விவரங்கள், ஆப் பயன்பாட்டு விவரங்கள், லொகேஷன் விவரங்கள், காலன்டர் நிகழ்வுகள், படிக்கப்படாத குறுந்தகவல்கள், தவறிய அழைப்புகள் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பயனருக்கு தகவல் தெரிவிக்காமல், தானாகவே செயல்படுத்தப்பட்டு விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுவாக இதுபோன்ற விவரங்களை இயக்குவதற்கு முன் சம்பந்தப்பட்ட பயனரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும். இதே போன்ற தகவலை ஒன்பிளஸ் பயனர்களும் தெரிவித்துள்ளனர். ஒன்பிளஸ்-இன் ஆக்சிஜன் ஒஎஸ் மற்றும் ரியல்மி யுஐ ஒருங்கிணைக்கப்பட்டதே இதற்கு காரணம் ஆகும். இந்த குற்றச்சாட்டு குறித்து ரியல்மி நிறுவனம் பதில் அளித்துள்ளது.
அதில், “பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் ரியல்மி அதிக முக்கியத்துவம் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. மேலும் டேட்டா பாதுகாப்பு விஷயத்தில் அதிக தனியுரிமையை பின்பற்றவும் நாங்கள் பொறுப்பு கொண்டுள்ளோம். தற்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டில், “Enhanced intelligent Services” அம்சம் பயனர்கள் சிறப்பான பேட்டரி பேக்கப் மற்றும் சாதனம் சூடாகாமல் வைத்துக் கொள்ள செய்வதற்காக, சாதனத்தின் பயன்பாடு ஆப்டிமைஸ் செய்யும். எனினும், இந்த அம்சத்திற்கான விவர குறிப்பில் இருப்பதற்கு மாறாக, நாங்கள், எஸ்.எம்.எஸ்., போன் கால், ஷெட்யுல் என எந்த தகவல்களையும் சேகரிப்பதில்லை.”
“இந்த சேவையின் கீழ் உள்ள டேட்டா அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டு, ஆன்ட்ராய்டு செக்யுரிட்டி மெக்கானிசத்திற்கு உட்பட்டு பயனர் சாதனத்திற்குள் என்க்ரிப்டெட் ஹார்டுவேரினுள் சேமிக்கப்படுகிறது. இந்த டேட்டா முழுமையாக சாதனத்திலேயே சேமிக்கப்படுகிறது. இது வேறு யாருக்கும் பகிரப்படவோ அல்லது கிளவுடிலோ அப்லோடு செய்யப்படுவதில்லை. நாங்கள் பயனர் தனியுரிமை விவகாரத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். பயனர் தேவைக்கு ஏற்ப ‘Enhanced intelligent Services’ அம்சத்தை தானாக ஆன் செய்யவும், ஆஃப் செய்யவும் முடியும்,” என்று தனியார் செய்தி நிறுவனத்திடம் ரியல்மி தெரிவித்து இருக்கிறது.