automobile
முற்றிலும் புதிய அட்வென்ச்சர் மாடல்.. பெயருக்கு காப்புரிமை பெற்ற டிவிஎஸ்!
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனை கடந்த சில ஆண்டுகளாக கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்திய சந்தையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு மாடல்களை விற்பனை செய்து வருகின்றன.
ஹீரோ எக்ஸ்-பல்ஸ், ஹோண்டா CB200X, ராயல் என்பீல்டு ஹிமாலயன், ஸ்கிராம், சுசுகி வி ஸ்டாம் SX 250, பிஎம்டபிள்யூ G 310 GS, கேடிஎம் அட்வென்ச்சர், யெஸ்டி அட்வென்ச்சர் என ஏராளமான மாடல்கள் அட்வென்ச்சர் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
எனினும், டிவிஎஸ் நிறுவனம் இதுவரை அட்வென்ச்சர் பிரிவு மாடல்களை அறிமுகம் செய்யாமல் உள்ளது. இந்த நிலை விரைவில் மாறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. டிவிஎஸ் நிறுவனம் அபாச்சி RTX பெயரை பயன்படுத்துவதற்கு காப்புரிமை பெற்று இருக்கிறது. இதில் X என்ற வார்த்தை அட்வென்ச்சர் அல்லது கிராஸ்ஒவர் ரக மாடலை குறிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது.
இது 200 சிசி பிரிவில் அறிமுகம் செய்யப்படுமா அல்லது 310 சிசி பிரிவில் அறிமுகமாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அபாச்சி RTR பெயர் இதுவரை ஸ்டிரீட் நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அபாச்சி RR மாடல் ஃபேர்டு ரக மாடல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், தற்போது காப்புரிமை பெறப்பட்டு இருக்கும் RTX பெயரை அட்வென்ச்சர் ரக மாடல்களை குறிக்கும் என்று தெரிகிறது.
டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் இடையேயான கூட்டணி மூலம் டிவிஎஸ் நிறுவனம், பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு 313சிசி அட்வென்ச்சர் மாடலை உருவாக்கிக் கொடுத்தது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இதே பிளாட்ஃபார்மில்- G 310 R, G 310 RR, G 310 GS என மூன்று மாடல்களை உருவாக்கிக் கொண்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் அபாச்சி RR 310 மாடலை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில் டிவிஎஸ் நிருவனம் 313 சிசி பிரிவில் புதிதாக அட்வென்ச்சர் மற்றும் நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவை பிஎம்டபிள்யூ மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும், சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்ட ரிபிரான்டு மாடல்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.