automobile
1.5 நொடிகளில் 100 கிமீ வேகத்தில் செல்லும் பென்ட்லி தானியங்கி எலெக்ட்ரிக் கார் – வெளியீடு எப்போ தெரியுமா?
தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்ய பென்ட்லி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. பிரிட்டனை சேர்ந்த ஆடம்பர கார் நிறுவனம் பென்ட்லி எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்க இருக்கிறது. இது பற்றிய திட்ட விவரங்களை பென்ட்லி தலைமை செயல் அதிகாரி அட்ரியன் ஹால்மார்க் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அதன்படி பென்ட்லி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடலில் அதிநவீன தானியங்கி தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார். பென்ட்லி எலெக்ட்ரிக் மாடலில் மொபைல்ஐ சூப்பர்விஷன் சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது. இதில் மொத்தம் 11 கேமராக்கள் உள்ளன. இதே சிஸ்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் போர்ஷே மக்கன் EV மாடலிலும் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக பென்ட்லி எலெக்ட்ரிக் மாடலில் தானியங்கி டிரைவிங் வசதி நெடுஞ்சாலைகளில் மட்டும் வழங்கப்பட இருக்கிறது. எதிர்காலத்தில் இதே வாகனத்திற்கு ஒவர் தி ஏர் (Over the Air) முறையிலான அப்டேட்கள் மூலம் முழுமையான தானியங்கி டிரைவிங் வசதி வழங்க பென்ட்லி திட்டமிட்டுள்ளது. தானியங்கி டிரைவிங் வசதி கொண்ட புதிய பென்ட்லி எலெக்ட்ரிக் கார் மாடல், 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பென்ட்லி எலெக்ட்ரிக் கார் மாடல் ஸ்போர்ட்ஸ் கூப் டிசைன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் பென்ட்லி எலெக்ட்ரிக் கார் மாடல் அதிகபட்சம் 1400 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 1.5 நொடிகளில் எட்டிவிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த காரின் செயல்திறன் மிகவும் அபாரமாக இருப்பதை அடுத்து, இதே கார் சற்றே குறைந்த செயல்திறன் வடிவிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகன துறையில் பென்ட்லி அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில், 2025 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய பென்ட்லி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 2025 முதல் 2030 வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இதற்காக பென்ட்லி நிறுவனம் 3 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய திட்டமிட்டு,தனது க்ரீவ் ஆலையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எதிர்கால எலெக்ட்ரிக் வாகன துறை சவால்களை எதிர்கொள்ள பென்ட்லி ஆயத்தமாக முடிவு செய்து இருக்கிறது.
பென்ட்லி மட்டுமின்றி மற்ற ஆடம்பர சூப்பர் கார் உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்குவதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கி, தற்போது மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான ரோல்ஸ் ராய்ஸ் தனது முதல் எலெக்ட்ரிக் கார்- ஸ்பெக்டர் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.