automobile
ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்.. ஐந்து புது மாடல்களை உருவாக்கும் ராயல் என்பீல்டு!
ராயல் என்பீல்டு நிறுவனம் தொடர்ச்சியாக புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் புதிய மோட்டார்சைக்கிள் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 :
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் பிஎம்டபிள்யூ G 10 GS போன்ற சக்திவாய்ந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு பதிலடி கொடுக்கப்போகும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 இருக்கும் என்று தெரிகிறது.
இந்த மாடலில் சக்திவாய்ந்த 450சிசி, சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
ராயல் என்பீல்டு புல்லட் :
ராயல் என்பீல்டு புல்லட் அந்நிறுவனத்தின் பழைய மோட்டார்சைக்கிள் மாடல் ஆகும். இன்றும் உற்பத்தி செய்யப்படும் மிக பழைய மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை இந்த மாடல் கொண்டிருக்கிறது. இந்த பாரம்பரியத்தை தொடரும் வகையில், ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய புல்லட் 350 மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் ஜெ சீரிஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு வருகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் 650 :
650சிசி பேரலல் டுவின் என்ஜின் கொண்ட அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உருவாக்கும் பணிகளில் ராயல் என்பீல்டு ஈடுபட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கு ஏற்ற அட்வென்ச்சர் மாடலாக இருக்கும். இந்த மாடல் அதன் ஆரம்பக்கட்ட பணிகளிலேயே உள்ளது. அறிமுகமாகும் போது இந்த மாடல் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் வெற்றிகர மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.
ராயல் என்பீல்டு ஸ்கிராம்ப்ளர் 650 :
ராயல் என்பீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650சிசி சார்ந்து ஸ்கிராம்ப்லர் ரக மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அறிமுகமாகும் போது இந்த மாடல் அமோக வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு கிளாசிக் 650 :
சமீபத்தில் தான் கிளாசிக் 650 மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த மோட்டார்சைக்கிள், இன்னும் அதன் உற்பத்தி நிலையில் இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் புதிய கிளாசிக் 650 மாடல் 2025 அல்லது அதற்கும் தாமதமாகவே அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.