latest news
ஆப்பிள் விஷன் ப்ரோவுக்கு ஆப்பு வைக்கும் புது ஹெட்செட்.. சாம்சங்-னா சும்மாவா?
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சி ஜூலை 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி Z ஃபோல்டு 5, Z ஃப்ளிப் 5, டேப் S9 சீரிஸ் மற்றும் கேலக்ஸி வாட்ச் S6 சீரிஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகிவிட்டன. மேலும் இந்த சாதனங்களின் டிசைன், அம்சங்கள் என இவை பற்றிய விவரங்களும் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத மற்றொரு புதிய சாதனமும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சாம்சங் நிறுவனம் XR ஹெட்செட்-ஐ அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்ற போதிலும், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கும் இதர சாதனங்களுக்கான டீசர்களை வெளியிட்டு உள்ளது.
கோ ஆன்ட்ராய்டு (GoAndroid) வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனத்தின் XR ஹெட்செட் பல்வேறு சான்றிதழ்களை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றின் மூலம் புதிய சாம்சங் XR ஹெட்செட்-இன் வெளியீடு விரைவில் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதோடு சாம்சங் XR ஹெட்செட்-இல் வழங்கப்பட இருக்கும் பேட்டரி பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
சேஃப்டிகொரியா சான்றளிக்கும் பிளாட்ஃபார்மில் EB-BI610ABY எனும் மாடல் நம்பர் கொண்ட பேட்டரி இடம்பெற்று இருக்கிறது. இந்த பேட்டரி முந்தைய EB-BI120ABY பேட்டரியின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் ன்று தெரிகிறது. இந்த பேட்டரி யூனிட் தான் சாம்சங் அறிவிக்காமல் விட்ட சாம்சங் AR கிலாஸ்களில் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில் புதிய பேட்டரி சாம்சங் விரைவில் வெளியிட இருக்கும் XR ஹெட்செட்-இல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சாம்சங்-இன் EB-BI610ABY பேட்டரி இந்தியாவின் பி.ஐ.எஸ்., சீனாவின் சி.கியூ.சி. போன்ற சான்றளிக்கும் பிளாட்ஃபார்ம்களிலும் சான்று பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் புதிய சாம்சங் XR ஹெட்செட் தென்கொரியா மட்டுமின்றி இந்தியா மற்றும் சீன சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
சமீபத்தில் வெளியான தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் தனது XR ஹெட்செட் வெளியீட்டை தாமதப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது. மேலும் முந்தைய திட்டத்தில் இருந்து இந்த ஹெட்செட்-இன் வெளியீடு சுமார் மூன்றில் இருந்து அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது. எதுவாயினும், இம்மாத இறுதியில் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் ஒன்று, இந்த சாதனத்தின் அறிமுகம் அல்லது சாதனம் பற்றிய தகவல் ஏதேனும் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.
சாம்சங் நிறுவனத்தின் புதிய XR ஹெட்செட், ஆப்பிள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்த விஷன் ப்ரோ மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-க்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சாம்சங்கின் புதிய XR ஹெட்செட் பற்றிய தகவல்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
Photo Courtesy: SafetyKorea via Gizmochina