Cricket
திடீர்னு என்ன ஆச்சுனே தெரியல..ஒருத்தரும் போன் பண்ணல.. கடுப்பான சாஹல்!
ஆர்.சி.பி. அணியை பிரிந்த கடும் கோபத்தையும், ஏமாற்றத்தையும் அளித்து இருக்கிறது என்று யுஸ்வேந்திர சாஹல் மனம் திறந்து பேசியுள்ளார். நடந்து முடிந்த ஐ.பி.எல். 2023 கிரிக்கெட் தொடரில் யுஸ்வேந்திர சாஹல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
2023 ஐ.பி.எல். சீசனுக்கான ஏலம் தொடங்கும் முன்பு, ரவிசந்திரன் அஸ்வினுக்கு பேட்டி அளித்த யுஸ்வேந்திர சாஹல், தான் மீண்டும் ஆர்.சி.பி. அணிக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்து இருந்தார். ஆனால், இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 6 கோடியே 50 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
சாஹலை தங்களது அணியில் சேர்த்துக் கொள்ள மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் போன்ற அணிகளும் கடும் போட்டி போட்டன. எனினும், சாஹலை ராஜஸ்தான் அணி அதிக தொகை கொடுத்து, அணியில் சேர்த்துக் கொண்டது. 2023 ஐ.பி.எல். சீசனில் யுஸ்வேந்திர சாஹல் மட்டும் 14 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர்.சி.பி. அணியுடனான பிரிவினை பற்றி யுஸ்வேந்திர சாஹல் மனம் திறந்து தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். ரன்வீர் அல்லாபடியாவின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சாஹல் கூறியதாவது..,
“ஏலத்தில் கலந்து கொள்ள என் பெயரை பதிவு செய்த போது, அவர்களை என்னை அணியில் சேர்த்துக் கொள்வதாகவும், ஏலத்தில் எடுப்பதாகவும் உறுதியளித்தனர். நானும், அதற்கு சம்மதம் தெரிவித்தேன், ஆனால், அவர்களை சொன்னதை செய்யவில்லை. ஏலம் முடிந்த மூன்று நாட்களுக்கு நான் கடும் கோபத்தில் இருந்தேன். பிறகு ஆர்.சி.பி. அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்காக களமிறங்கினேன். ஆர்.சி.பி. சார்ந்து யாரிடமும் நான் பேசவே இல்லை, அணி பயிற்சியாளர்களுடனும் பேசவில்லை.”
“உண்மையில், நான் மோசமாக உணர்ந்தேன். 2014-ம் ஆண்டு எனது பயணம் துவங்கியது. நான் அந்த அணிக்ககாக எட்டு ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன், அது எனக்கு விசித்திரமாக இருந்தது. ஆர்.சி.பி. அணிக்காக எனது பங்களிப்பு தான், இந்திய அணியில் நான் இடம்பிடிக்க காரணமாக இருந்தது. அவர்கள் நான், எனது திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அளித்தனர். முதல் போட்டியில் இருந்தே, விராட் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார்.”
“எனக்கு ரூ. 15 கோடி வேண்டும் என்றெல்லாம் நான் கேட்க மாட்டேன், எனக்கு ரூ. 8 கோடி போதுமானது. எனக்கு இவ்வளவு தொகை கொடுத்தே ஆகவேண்டும் என்று நான் கேட்கவில்லை. சாஹல் அதிக பணம் கேட்டிருப்பார் என்று பலர் கூறியதாக எனக்கு தகவல்கள் கிடைத்தன. இதன் காரணமாக தான், நான் குறிப்பிட்டு இவ்வளவு தொகை வேண்டும் என்று வலியுறுத்தவில்லை என்று கூறி விளக்கம் அளித்தேன்.”
“என் தகுதி என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். என்னை அதிக வருத்தம் கொள்ள செய்தது, யாருமே எனக்கு போன் செய்யாமவ் இருந்தது மட்டும் தான். யாரும் என்னுடன் பேசவில்லை. அவர்களுக்கு 114 போட்டிகளில் விளையாடி இருப்பேன் என்று நினைக்கிறேன். திடீரென்று என்ன ஆனது என்று எனக்கு புரியவில்லை. ஏலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், தற்போது நான் உண்ர்ந்து கொண்டேன். எது நடந்தாலும் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.”
“ராஜஸ்தான் அணிக்கு வந்த பிறகு நான் டெத் பவுலர் ஆகி இருக்கிறேன். ஆர்.சி.பி. அணியில் எனது ஓவர்கள் பெரும்பாலும் 16 அல்லது 17 ஓவர்களில் முடிந்து விடும். இங்கு எனது கிரிக்கெட் திறன் 5-இல் இருந்து 10 சதவீதம் வரை வளர்ச்சி பெற்று இருக்கிறது. ஆர்.சி.பி. மீதான இணைப்பு இன்னமும் இருக்கிறது. ஆனால் ராஜஸ்தான் அணியில் இருப்பது எனது கிரிக்கெட்-க்கு உதவியாக இருந்துள்ளது,” என்று தெரிவித்தார்.