Cricket
வேக வேகமாக வெஸ்ட் இன்டீஸ்க்கு பறக்கும் அஜித் அகார்கர்.. டிராவிட், ரோகித்-ஐ சந்திக்க திட்டமோ?..
இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவர் அஜித் அகார்கர் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மாவுடன் உலக கோப்பை தொடர் பற்றிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 50 ஓவர்கள் கொண்ட உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி, இந்தியாவின் ஆமதாபாத் நகரில் துவங்குகிறது.
தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து அக்போடர் 15 ஆம் தேதி ஆமதாபாத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.
“தற்போது சலில் அன்கோலா மேற்கிந்திய தீவுகளில் இருக்கிறார். டெஸ்ட் சீரிஸ் நிறைவு பெற்றதும், அவர் இந்தியா திரும்புகிறார். ஒருநாள் போட்டி தொடர் தொடங்குவதற்கு முன் அஜித் அகார்கர் இந்திய அணியுடன் இணைகிறார்,” என்று விவரம் தெரிவிக்க விரும்பாத பி.சி.சி.ஐ. சார்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
தேர்வுக் குழு தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அஜித் அகார்கர் அணி நிர்வாகத்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. அந்த வகையில், இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வியூகம் பற்றி விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழு எண்ண ஓட்டம் சீராக இருந்தால் தான், உலக கோப்பைக்கான 20 வீரர்களை சரியாக தேர்வு செய்ய முடியும். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தேர்வுக் குழு தலைவர் மற்றும் அணி நிர்வாகம் இடையே நடைபெற இருக்கிறது.
பேச்சுவார்த்தையில் ஜஸ்ப்ரீத் பும்ரா உடல்நிலை எப்படி இருக்கிறது, அவரால் ஐயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் விளையாட முடியுமா என்பது பற்றி விவாதிக்கப்படலாம். தேசிய கிரிக்கெட் ஆணையம் ஜஸ்ப்ரீத் பும்ரா அணிக்கு திரும்ப அழைப்பதற்கான நோட்டீசை இதுவரை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.