Cricket
வேற வழி இல்லாம அதை பண்ணிட்டோம்.. இஷான் கிஷன் பற்றி ரோகித் ஷர்மா ஒபன் டாக்!
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதுள்ள வீரர்கள், வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் ஆவர். ஏராளமான இளம் வீரர்கள் அடங்கிய அணி என்ற அடிப்படையில், இந்திய அணியின் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கிறது. தொடர்ச்சியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியின் அனைத்து வித போட்டிகளிலும் சுப்மன் கில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.
இவரை தொடர்ந்து இஷான் கிஷன் இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் இருப்பது, அவரின் ஆட்டத்தில் வெளிப்படுகிறது. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் இஷான் கிஷன். முதல் டெஸ்ட் போட்டியில் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இஷானுக்கு ஏற்படவில்லை.
எனினும், விக்கெட் கீப்பராக அவரது செயல்பாடு அனைவரையும் சிறப்பாக இருந்ததோடு மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் என்று பலதரப்பட்டோரை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன் கேப்டன் ரோகித் ஷர்மா இஷான் கிஷனை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“இஷான் திறமை மிக்க வீரர் ஆவார். இந்திய அணியின், குறுகிய கால போட்டியில் அதனை நாம் அனைவரும் பார்த்துவிட்டோம். 50 ஓவர்கள் போட்டியில் இஷான் கிஷன் 200 ரன்களை அடித்திருக்கிறார். அவரிடம் கேம் இருக்கிறது, அவரது திறமையை பட்ட தீட்ட வேண்டியது நமது பொறுப்பு. நாம் அவருக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.”
“அவர் ஒரு இடது கை வீரர் ஆவார். அவர் அதிரடியாக விளையாட விரும்புகிறார். நான் அவருடன் தெளிவாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டேன், அதில் அணி நிர்வாகம் அவரிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை எடுத்துரைத்து இருக்கிறேன். அவருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவரிடம் கேம் இருக்கிறது, அவருக்கு சுதந்திரம் தேவைப்படுகிறது, நாங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுப்போம்.”
“அவரது விக்கெட் கீப்பிங் பற்றி நிச்சயம் பேசியே ஆக வேண்டும். தனது முதல் போட்டியிலேயே அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அஷ்வின், ஜடேஜா போன்ற வீரர்கள் வீசும் பந்துகளை கணிப்பது மிகவும் கடினம். அவை வெவ்வேறு திசையில் செல்லும், சில பந்துகள் தரையில் மிகவும் கீழே செல்லும்.. அவரது கீப்பிங் திறமை என்னை கவர்ந்து விட்டது.”
“தவிர்க்க முடியாத காரணத்தால், அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு அளிக்க முடியாத சூழல் உருவாகி விட்டது. நாங்கள் டிக்லேர் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். எங்களின் டாப் ஆர்டர் பேட்டர்கள் நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அவர் சிறப்பாக செயல்படுவார்,” என்று தெரிவித்தார்.