Connect with us

Cricket

வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை – இறுதி போட்டியில் இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ மோதல்..!

Published

on

ACC-Final-Ind-vs-Pak-Featured-Img

வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா ஏ அணி முன்னேறி இருக்கிறது. கொலம்போவில் நேற்று (ஜூலை 21) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா ஏ அணி வங்கதேசம் ஏ அணியை வீழ்த்தியது. அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 211 ரன்களை விளாசியது.

இந்தியா ஏ அணியின் கேப்டன் யாஷ் தல் 66 ரன்களை விளாசினார். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் ஏ அணியை 160 ரன்களில் சுருட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா ஏ அணி சார்பில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நிஷாந்த் சந்து 20 ரனக்ளை விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

Ind-A-vs-Bangladesh-A

Ind-A-vs-Bangladesh-A

அரையிறுதி போட்டியின் 19-வது ஓவரில் இந்தியா ஏ அணி 75 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த போது துல் களமிறங்கினார். களமிறங்கியதில் இருந்தே வங்கதேச பவுலர்களை விளாச துவங்கினார் துல். 50 ஓவர்கள் வரை களத்தில் இருந்த துல், 50-வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். துல் மற்றும் மனவ் சத்தர் ஜோடி எட்டாவது விக்கெட்டில் 41 ரன்களை சேர்த்தது.

இதன் மூலம் இந்தியா ஏ அணி 200 ரன்களை கடந்தது. எளிய இலக்கை துரத்திய வங்கதேச ஏ அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான டான்சிட் ஹாசன் மற்றும் முகமது நயிம் இந்திய பவுலர்களை ஆரம்பம் முதலே தாக்கி அடித்து ரன் வேட்டையில் ஈடுபட்டனர். டான்சிட் ஹாசன் 56 பந்துகளில் 51 ரன்களையும், முகமது நயிம் 40 பந்துகளில் 38 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர்.

Ind-A-vs-Bangladesh-A 2

Ind-A-vs-Bangladesh-A 2

இவர்களது அதிரடி காரணமாக வங்கதேசம் ஏ அணி 11 ஓவர்களில் 70 ரன்களை கடந்தது. இதன் பிறகு ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாக திரும்பியது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டியின் போக்கை மாற்றினர். இந்தியா ஏ அணியின் சத்தர் வங்கதேச அணியின் நயிம் விக்கெட்டை வீழ்த்தினார். இதில் இருந்து சுமார் 90 ரன்களை சேர்ப்பதற்குள் வங்கதேசம் ஏ அணி 9 விக்கெட்களை இழந்தது.

மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி இலங்கை ஏ அணியினை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதன்படி வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதுகின்றன. இரு அணிகள் மோதும் இறுதி போட்டி கொலம்போவில் நாளை நடைபெற இருக்கிறது.

google news