Cricket
இது சரிப்பட்டு வராது ராஜா..! சுப்மன் கில்லுக்கு முன்னாள் வீரரின் நறுக் அட்வைஸ்..!
இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் மூன்றாவது வீரராக களமிறங்கி வருகிறார். முன்னதாக துவக்க வீரராக களமிறங்கி வந்த சுப்மன் கில், புதிய ஸ்லாட்-ஆன மூன்றாவது இடத்தில் அதிக ரன்களை சேர்க்க தவறி வருகிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆறு ரன்களுக்கு அவுட் ஆன சுப்மன் கில், இரண்டாவது போட்டியில் பத்து ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். சுப்மன் கில் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார்.
31 டெஸ்ட் போட்டிகள், இரண்டு ஒரு நாள் போட்டிகளை இந்தியாவுக்காக விளையாடி இருப்பவரும், உள்நாட்டு போட்டிகளில் ஏராளமான சாதனைகளை படைத்தவருமான வாசிம் ஜாஃபர், சுப்மன் கில் மூன்றாவது இடம், ஸ்லோ மற்றும் லோ பிட்ச்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“அவர் அந்த இடத்தில் நீண்ட நேரம் விளையாடுவது அவசியம் ஆகும். ஆனால், இவரின் துவக்கம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று கிடையாது. இந்த டெஸ்ட் போட்டி, இந்த இன்னிங்ஸ் அவருக்கு நல்ல வாய்ப்பு. விக்கெட் அருமையாக இருந்தது. அவருக்கு சிறப்பான துவக்கம் கிடைத்திருக்கிறது. அவர் கொஞ்சம் இலகுவாக விளையாடியதாக எனக்கு தெரிகிறது. அப்படி அவுட் ஆனது அவருக்கு நிச்சயமாக ஏமாற்றத்தை அளித்திருக்கும். அங்கு தான் அவர் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிகளவு வெள்ளை நிற பந்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பழகிப் போன அவருக்கு, பந்து பேட்டிற்கு வருவது பிடித்திருக்கிறது.”
“வெள்ளை நிற பந்தில் கிடைப்பதை போன்ற பேஸ், அவருக்கு தேவைப்படுகிறது. ஆனால் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இதுபோன்ற விக்கெட்களில், அதுவும் இந்தியா போன்ற களங்களில் விளையாடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அவர் இதனை புரிந்து கொண்டு, இதுபோன்ற சூழலில் சிறப்பாக விளையாடும் அளவுக்கு கேமினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.”
“இது கனவு துவக்கம் போன்று அமைந்தது, இதில் கவலையே இல்லை. அறிமுக போட்டியிலேயே 170 ரன்களை விளாசுவது, அதைத் தொடர்ந்து அரை சதம் அடிப்பது போன்றவை அனைவருக்கும் கனவு போன்று இருக்கும். அவர் சரியான பாதையில் இருக்கிறார், அவரை எனக்கு 2013-14 முதலே நன்கு தெரியும், அவர் ஜுவாலா சிங்குடன் பணியாற்றி வருகிறார், நானும் அதில் பங்கேற்கிறேன்,” என்று தெரிவித்தார்.