Cricket
ப்ரோமோவுக்கு அக்கப்போரா? கொஞ்சமாவது வளருங்க.. ஐ.சி.சி.-யை சீண்டிய ஷோயப் அக்தர்..!
2023 உலக கோப்பை ஒருநாள் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் நடத்தப்படும் இந்த தொடர் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வீதம் நடத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை உலகளவில் விளம்பரப்படுத்தும் வகையில், ப்ரோ எனப்படும் விளம்பர வீடியோ வெளியிடப்பட்டது.
சில நாட்களுக்கு முன் இந்த வீடியோ வெளியானது. இதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இடம்பெறாதது குறித்து, முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு செய்ததற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கு ஒரு நாள் மட்டும் தான் ஆகும், (‘It Only Takes One Day’) என்ற தலைப்பில் உலக கோப்பை தொடருக்கான ப்ரோமோ வீடியோ உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் முந்தைய உலக கோப்பை தொடர்களில் இருந்து விசேஷ சம்பவங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதற்கான பின்னணி குரல் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் கொடுத்திருக்கிறார்.
இந்த வீடியோவில் ஜெமிமா ரோட்ரிகியுஸ், தினேஷ் கார்த்திக், ஜான்டி ரோட்ஸ் மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பாபர் அசாம் தவிர்க்கப்பட்டதற்கு ஷோயப் அக்தர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கடுமையாக சாடி இருக்கிறார்.
“உலக கோப்பை ப்ரோ வீடியோவில், பாகிஸ்தான் மற்றும் பாபர் அசாம் இடம்பெறக்கூடாது என நினைத்தவர்கள், தங்களை ஜோக் ஆக நினைத்துக் கொண்டார்கள். கொஞ்சமாவது வளர்வதற்கு இது தான் தக்க தருணம்,” என்று ஷோயப் அக்தர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியோ கோப்பை 2023-இல் பாகிஸ்தான் :
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இலங்கையை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுவிட்டது. அந்த வகையில், தொடரை கைப்பற்றுவதற்காக இறுதி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டி கொலம்போவில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை 2023 தொடரில் கவனம் செலுத்த இருக்கிறது.
ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாலை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 2-ம் தேதி பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 15-ம் நடைபெறும் உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்திய அணியுடன் மோத இருக்கிறது.