Cricket
என்னது சாய் சுதர்சன் அவுட் இல்லையா? இந்தியா-பாகிஸ்தான் இறுதி போட்டியில் புது சர்ச்சை..
வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா ஏ அணி வீரர் சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனினும், இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதிய இறுதி போட்டியில் சாய் சுசர்சன் அதிக ரன்களை அடிக்கவில்லை. எனினும், சாய் சுதர்சன் அவுட் ஆன விதம் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
அர்ஷத் இக்பால் வீசிய பந்தை புல் ஷாட் அடிக்க முயன்ற சாய் சுதர்சன் முகமது ஹாரிஸ் கேட்ச்-இல் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்த பந்தை வீசிய போது, இக்பாலின் கால் கிரீசை விட்டு விலகி இருப்பதை போன்று தெரிந்தது. இதை கொண்டு ரசிகர்கள் அது நோ-பால் என்று கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் இந்த பந்தின் இறுதி முடிவு, சாய் சுதர்சனுக்கு எதிராக அமைந்தது.
பரபரப்பான இறுதி போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் ஏ அணியின் தயிப் தாஹிர் அடித்த அதிரடி சதம் காரணமாக இந்தியா ஏ அணி இறுதி போட்டியில் 128 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் ஏ அணி இரண்டாவது முறையாக வளர்ந்து வரும் நாடுகளுக்கான ஆசிய கோப்பையை வென்று இருக்கிறது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் ஏ அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. இதில் தாஹிர் மட்டும் 71 பந்துகளில் 108 ரன்களை விளாசினார். அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி 40 ஓவர்களில் 224 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் தொடரில் இந்தியா ஏ முதல் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பாகிஸ்தான் ஏ அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. டாஸ் முடிவில் துவங்கி, அனைத்து முடிவுகளும் இந்தியா ஏ அணிக்கு எதிராகவே அமைந்தது. இந்தியா ஏ அணி தோல்வியுற்றதை அடுத்து, சாய் சுதர்சன் அவுட் குறித்த சர்ச்சை சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.