Cricket
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – பாகிஸ்தான் முதலிடம், இந்தியா எந்த இடம் தெரியுமா?
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், இந்திய அணி முழு புள்ளிகளை பெறும் வாய்ப்பை இழந்தது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டதால், இந்திய அணி வெஸ்ட் இன்டீசை ஒயிட்வாஷ் செய்யும் சந்தர்பத்தை இழந்தது.
இவைகளின் காரணமாக இந்திய அணி 24-க்கு பதிலாக வெறும் 16 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. சதவீதம் அடிப்படையில் இந்திய அணி தற்போது 66.67 சதவீத புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், பாகிஸ்தான் அணி 100 சதவீத புள்ளிகளுடன் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. வெஸ்ட் இன்டீஸ் அணி இந்த புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சமனில் முடிந்ததால், வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு 4 புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக அந்த அணியின் புள்ளிகள் 16.67 சதவீதமாக இருக்கிறது.
உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை பொறுத்தவரை இந்திய அணி தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு சுற்று பயணம் செய்து விளையாட இருக்கிறது. இத்துடன் இந்திய அணி உள்நாட்டில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
மழை குறுக்கிட்ட காரணத்தால் இந்திய அணி வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், இரண்டாவது இன்னிங்ஸ்-இல் இந்திய அணி 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இன்டீஸ் அணி களமிறங்கியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இன்டீஸ் அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 76 ரன்களை குவித்து இருந்தது. ஐந்தாம் நாள் ஆட்டம் மழை காரணமாக நடத்தப்படவே இல்லை.