Cricket
சும்மா சொன்னேன்னு நினைச்சியா? கடைசி பந்தில் விக்கெட்.. வெற்றியுடன் விடைபெற்ற ஸ்டூவர்ட் பிராட்..!
ஆஷஸ் தொடரின் 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நேற்றைய வெற்றியின் மூலம் ஆஷஸ் சீரிஸ் 2-2 என்ற அடிப்படையில் சமனில் முடிந்துள்ளது. வெற்றி இலக்கு 384 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணி 264-க்கு மூன்று விக்கெட்களை மட்டுமே இழந்து முன்னணியில் இருந்தது.
அதன்பிறகு சரசரவென விக்கெட்கள் சரிந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 334 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெறும் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
நேற்றைய போட்டியின் போது மழை குறுக்கிட்டதை அடுத்து இரண்டு மணி நேரம் போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் துவங்கியது. இந்த சூழல் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக திரும்பியது. 19 பந்துகளில் 11 ரன்களை விட்டுக்கொடுத்து நான்கு ஆஸ்திரேலிய விக்கெட்களை இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி தன் பங்கிற்கு மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். இந்த இன்னிங்ஸ்-இல் மட்டும் மொயின் அலி 76 ரன்களை விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். ஆல்-ரவுன்டர் க்ரிஸ் வோக்ஸ் 50 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளராக செயல்படும் ஸ்டூவர்ட் பிராட் போட்டியை தன் பக்கம் திரும்ப செய்தார். ஏற்கனவே ஆஷஸ் தொடரை தக்க வைத்துக் கொண்ட ஆஸ்திரேலியா அணி 2001 ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் தொடர் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறியதாவது..,
“இது மிகவும் அருமையாக இருந்தது. க்ரிஸ் வோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆட்டத்தின் போக்கை சிறப்பாக மாற்றினர். வோக்சி தன் பங்கிற்கு சில விக்கெட்களை வீழ்த்தினார். இதில் கடந்த ஆண்டுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார். சில விக்கெட்கள் கிடைத்ததும், மீண்டும் நம்பிக்கை பிறந்தது.”
“இங்கு ஒன்றுகூடிய ரசிகர்கள் வியக்க வைத்தனர். அவர்களின் சத்தம் எங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. அணிக்காக இரண்டு விக்கெட்களை வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓய்வு முடிவை அறிவித்த பிறகு, கடைசி பந்து எப்படி இருக்கும் என்ற ஆவல் மனதில் எழும். அப்போது ஒரு விக்கெட் எடுத்து ஆஷஸ் டெஸ்ட் போட்டியை வெற்றி பெறுவது கூல் சம்பவம்,” என்று தெரிவித்தார்.