Cricket
தேதி மாறிடுச்சு!.. உலக கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி என்னைக்கு நடக்குது தெரியுமா?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான உலக கோப்பை போட்டி அக்டோபர் 14 ஆம் தேதி ஆமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்த போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருந்தது. புதிய தேதி மாற்றத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் ஒப்புதல் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் தேதியை மாற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மற்றும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி தேதி மாற்றப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஆமதாபாத்தில் அக்டோபர் 14 ஆம் தேதியும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையேயான போட்டி ஐதராபாத்தில் அக்டோபர் 10 ஆம் தேதியும் மோதுகின்றன. முன்னதாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையேயான போட்டி அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆமதாபாத் நகரில் நவராத்திரி பண்டிகை துவங்கும் முதல் நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியின் தேதி மாற்றப்பட்டு இருக்கிறது. இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பாகிஸ்தான் கரிக்கெட் கவுன்சிலை தொடர்பு கொண்டு தேதி மாற்றுவது குறித்த ஆலோசனை செய்யப்பட்டது.
தற்போது மாற்றப்பட்ட தேதிகள் அடங்கிய, உலக கோப்பை தொடருக்கான புதிய அட்டவனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு மாற்றங்கள் மட்டுமின்றி, மற்ற அணிகள் மோதும் போட்டிகளின் தேதியும் மாற்றி அமைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே வெளியான அட்டவனையின் படி பாகிஸ்தான் அணிக்கான போட்டி விவரங்கள் :
அக்டோபர் 6 – ஐதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணி
அக்டோபர் 12 – ஐதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணி
அக்டோபர் 15 – ஆமதாபாத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணி
அக்டோபர் 20 – பெங்களூருவில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணி
அக்டோபர் 23 – சென்னையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி
அக்டோபர் 27 – சென்னையில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி
அக்டோபர் 31 – கொல்கத்தாவில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி
நவம்பர் 4 – பெங்களூருவில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணி