Cricket
தோல்வி பஞ்சாயத்து.. டிராவிட், ரோகித்-க்கு ஆதரவாக விமர்சகர்களை புரட்டி எடுத்த அஸ்வின்..!
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்காதது பற்றி கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்ப்புக்கு ரவிசந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்திருக்கிறார். ரசிகர்கள் ஏமற்றம் அடைந்த விவகாரத்தில் அஸ்வின், கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.
என்ன காரணம் என்பதை புரிந்து கொள்ளாமல், கேப்டன் மற்றும் பயிற்சியாளரை குறை கூறுவதற்கு காரணங்களை தேடுவதாக ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“இந்திய அணி இரண்டவாது ஒருநாள் போட்டியில் தோல்வியுற்றது. உடனே அதனை சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆக்கி விடுகின்றனர். ஏன் இந்த வீரர்கள் விளையாடினார்கள், ஏன் இந்த வீரர்கள் விளையாடவில்லை என்ற கேள்விகள் டிரென்ட் ஆகின்றன. ஏன் இப்படியான எதிர்ப்புகள் வருகின்றன என்று எனக்கு புரியவில்லை. ரோகித் மற்றும் விராட் கோலி இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. முதல் ஒருநாள் போட்டியிலும் ரோகித் ஷர்மா கடைசியாகவே களத்தில் இறங்கினார். இதனால் ரோகித் மற்றும் விராட் விளையாடி இருக்க வேண்டும் என்று பேசினர்.”
“உலக கோப்பைக்கு கூட தகுதி பெறாத அணியிடம் எப்படி தோல்வி அடைய முடியும் என்பதை சிலர் புரிந்து கொள்ளழில்லை. இந்திய அணியின் ஒற்றை இலக்கு உலக கோப்பையை வெல்வது மட்டும் தான் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். உலக கோப்பையை வென்றிட வேண்டும் என்ற எண்ணம் எழுவதற்கு முக்கிய காரணம் ஐ.பி.எல். தான்.”
“ஏற்கனவே பல வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல்நலம் தேறி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு பும்ரா அணிக்கு திரும்பி இருக்கிறார். பிரசித் கிருஷ்னாவும் திரும்பியுள்ளார். இதனால் நமக்கு காயம் சார்ந்த பிரச்சினை இருந்து வருகிறது. குறை கூற வேண்டுமே என்ற காரணத்திற்காக பலர் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் ஷர்மா மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.”
“அவர்கள் வித்தியாசமான வீரர்களை முயற்சிக்க காரணம், கடந்த டி20 உலக கோப்பையில் அவர்கள் எதிர்கொண்ட அனுபவம் தான். நம்மிடம் ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா போன்ற வீரர்கள் இல்லை. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களும் இல்லை. இதன் காரணமாக தான் பல்வேறு ஆப்ஷன்களை ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு முன்பு சோதனை செய்கிறோம்,” என்று கூறினார்.