Cricket
2023 உலக கோப்பை – ஒருவழியா பாகிஸ்தானுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த கிரிக்கெட் வாரியம்..!
2023 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தொடரில் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது. பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்தது தொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏராளமான அறிக்கைகளை வெளியிட்டது.
மேலும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் செய்து உலக கோப்பை தொடரில் பங்கேற்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பலக்கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஆசிய கோப்பை தொடர்பான பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.
அப்போதில் இருந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்பது தொடர்பான அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அனுமதி வழங்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளது. முன்னதாக சாகா அஷ்ரஃப் தலைமையிலான குழு இந்தியாவுக்கு பாதுகாப்பு குழுவை அனுப்பி, போட்டி நடைபெறும் மைதானங்களில் ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வு தொடர்பான அறிக்கைகளை பார்த்து, ஆலோசனை செய்த பிறகே பாகிஸ்தான் அரசு தனது அணியை உலக கோப்பை தொடரில் பங்கேற்க அனுமதி அளித்து இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது..,
“விளையாட்டை அரசியலுடன் ஒருங்கிணைக்கக்கூடாது என்பதில் பாகிஸ்தான் தொடர்ந்து கவனமாக செயல்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பாகிஸ்தான் அரசு தனது கிரிக்கெட் அணியை இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடரில் பங்கேற்க அனுப்புவது என்ற முடிவை எடுத்து இருக்கிறது,” என தெரிவித்துள்ளது.
தற்போதைய அட்டவனையின் படி பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் அக்டோபர் 6 ஆம் தேதி விளையாட இருக்கிறது. எனினும், இந்த தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருந்தது. எனினும், இந்த போட்டி அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் நவம்பர் 12 ஆம் தேதி மோதுகிறது. இந்த தேதியும் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மாற்றங்கள் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023 கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கான புதிய அட்டவனையை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.