Cricket
அவர்தாங்க எனக்கு பாஸ்.. ரோகித் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய திலக் வர்மா..!
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்களை குவித்தது. எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இன்டீஸ் அணி 18.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு நிக்கோலஸ் பூரான் 40 பந்துகளில் 67 ரன்களை விளாசினார்.
இந்திய அணியின் பேட்டிங் யூனிட் முழுமையாக சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இளம் வீரரான திலக் வர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 போட்டிகளில் தனது முதல் அரைசதத்தை அடித்தார். இரண்டாவது சர்வதேச போட்டிகளில் களமிறங்கிய திலக் வர்மா அரைசதம் அடித்ததற்கு ரோகித் ஷர்மாவுக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் ஷர்மா எனக்கு எப்போதும் தூண்டுதலாக இருந்து வந்துள்ளனர். ரோகித் உடன் நான் அதிக நேரம் செலவிடுகிறேன். எனது முதல் ஐ.பி.எல். சீசனில் அவர் என்னிடம், திலக் நீ அனைத்து விதமான கிரிக்கெட்டையும் ஆடும் திறன் கொண்ட கிரிக்கெட்டர் என்று தெரிவித்தார். அது எனது நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவரது வழிகாட்டல் எனக்கு மாபெரும் துணையாக இருந்து வருகிறது.”
“எனக்கு மிகப்பெரும் ஆதரவாக ரோகித் ஷர்மா இருந்து வருகிறார். அவர் எப்போதும் என்னுடன் பேசுவார். போட்டியை அனுபவித்து விளையாட வேண்டும் என்று அவர் என்னிடம் கூறுவார். அது எனக்கு ஐ.பி.எல். தொடரில் திருப்பு முனையாக இருந்தது. எனது செயல்திறன் இந்தியாவுக்காக என்னை விளையாட வைத்திருக்கிறது. இதனை தொடர்ச்சியாக செய்துகாட்ட விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
சுப்மன் கில் விக்கெட்டை பறிக்கொடுத்ததும் நான்காவது ஓவரில் திலக் வர்மா களமிறங்கினார். இதே போட்டி சூர்யகுமார் யாதவ்-க்கு 50 ஆவது டி20 ஆக அமைந்தது. எனினும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில், ரன் அவுட் மூலம் விக்கெட்டை பறிக்கொடுத்தார். அப்போது இந்திய அணி 18 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்து இருந்தது.
துவக்க வீரரான இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து ஆடிய திலரக் வர்மா மூன்றாவது விக்கெட்டிற்கு 42 ரன்களை சேர்த்த போது, இஷான் கிஷன் 27 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். திலக் வர்மா நான்கு பவுன்டரிகள், ஒரு சிக்சர் என 51 ரன்களை விளாசி தன் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவரை தொடர்ந்து வந்த ஹர்திக் பான்டியா 24 ரன்களை எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்களை சேர்த்தது. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு நிக்கோலஸ் பூரானின் அதிரடி ஆட்டம் வெற்றியை தேடிக் கொடுத்தது.