latest news
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை… விஜய பிரபாகரனின் கோரிக்கை எடுபடுமா?
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையோடு அந்தத் தொகுதியின் தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகரன் டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்க இருக்கிறார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் களமிறங்கினார் தேமுதிகவின் விஜய பிரபாகரன். எதிர்முனையில் சிட்டிங் எம்பி காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் என மும்முனை போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்த விஜய பிரபாகரன் கடைசி சில சுற்றுகளில் பின் தங்கியதோடு, 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியைத் தழுவினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, `விஜய பிரபாகரன் தோற்கவில்லை. திட்டமிட்டு சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். உணவு இடைவேளை முடிந்ததும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 13வது சுற்று வரை விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அந்த சுற்றில்தான் முறைகேடு நடந்தது’ என்று குற்றம் சாட்டியதோடு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தநிலையில் டெல்லி சென்றுள்ள விஜய பிரபாகரன், தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை குறித்து வலியுறுத்த இருக்கிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, மறு வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவற்றுக்கு உயர் நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என்கிற நிலையில், தேர்தல் ஆணையரை சந்திப்பதில் ஒரு பயனுமில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தரப்பில் தேமுதிகவின் நடவடிக்கையை விமர்சித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: உச்ச கட்ட உரசல்… பாஜக மேலிட ரேடாரில் அண்ணாமலை… பதவி தப்புமா?