Cricket
T20 World Cup: பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கைக்கு சூப்பர் 8 வாய்ப்பு எப்படி?
வெஸ்ட் இண்டீஸ் – அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கான போட்டி தீவிரமடைந்திருக்கிறது. 2022 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் வெளியேறும் தருவாயில் இருக்கின்றன. இது சூப்பர் 8 சுற்றுக்கான போட்டியை பரபரப்பாக்கியிருக்கிறது. இதில், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற எந்த அளவுக்கு வாய்ப்பிருக்கிறது?
பாகிஸ்தான்
அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்திருந்தாலும் கனடாவுக்கு எதிரான வெற்றி குரூப் ஏ-யில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தானுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. ரன் ரேட்டும் 0.191 என்று முன்னேற்றம் கண்டிருக்கும் நிலையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகும். அதேபோல், அமெரிக்கா அடுத்து விளையாடும் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும். அயர்லாந்து போட்டியில் முதலில் பேட் செய்து 112 ரன்களை ஸ்கோர் செய்யும் பட்சத்தில், அமெரிக்க அணி குறைந்த ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் கூட போதும். அதேநேரம் மழையால் அயர்லாந்து போட்டி கைவிடப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு பாதகமாக முடியும்.
இங்கிலாந்து
குரூப் ஏ-யில் பாகிஸ்தான் இருக்கும் அதேநிலைதான் குரூப் பி-யில் இங்கிலாந்து அணியும் இருக்கிறது. இங்கிலாந்து, அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டியதோடு, ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜூன் 15-ல் நடக்கும் போட்டியில் தோல்வியடைய வேண்டும். அதேபோல், ஸ்காட்லாந்து 2.164 ரன் ரேட்டோடு இருக்கும் நிலையில், -1.8 என்கிற ரன் ரேட்டில் இருக்கும் இங்கிலாந்து நெட் ரன் ரேட்டையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வருண பகவான் வழி விடாவிட்டால் இங்கிலாந்து பாடு திண்டாட்டம்தான்.
இலங்கை
நேபாளத்துக்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில், இந்த உலகக் கோப்பையில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத இலங்கை அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவது மிகவும் கடினமான காரியம்தான். இருப்பினும் மயிரிழையில் அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. நெதர்லாந்தை வீழ்த்தினாலும் அந்த அணி அதிகபட்சமாக 3 புள்ளிகளை மட்டுமே பெற இயலும். அதேநேரம், வங்கதேசம் – நெதர்லாந்து அணிகளுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், அவை தலா 2 புள்ளிகளுடன் இருக்கின்றன. இந்த அணிகள் விளையாடும் போட்டி மழையால் கைவிடப்பட்டு, அடுத்த ஒரு போட்டியை இரு அணிகளும் வென்றால், இரண்டாவது இடத்துக்கான போட்டியில் இலங்கையும் 3 புள்ளிகளோடு இருக்கும். அந்த சூழ்நிலையில், நெட் ரன் ரேட் உதவியோடு இலங்கை அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறலாம்.
நியூஸிலாந்து
இந்த லிஸ்டில் மிகவும் பின்தங்கியிருக்கும் அணி என்றால் அது நியூஸிலாந்துதான். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி அந்த அணியின் சூப்பர் 8 வாய்ப்பை பெரிய அளவுக்கு பதம் பார்த்திருக்கிறது. ஆப்கானிஸ்தானும் வெஸ்ட் இண்டீஸும் வலுவான ரன் ரேட்டோடு இருக்கிற நிலையில், அதை முறியடிக்க வெஸ்ட் இண்டீஸை அதிக ரன்கள் அல்லது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் நியூஸிலாந்து இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் நியூஸிலாந்து தோற்றால், பி.என்.ஜி மற்றும் உகாண்டாவுக்கு எதிரான அடுத்த 2 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாது.