Cricket
ஜம்மு தாக்குதல் பற்றி இன்ஸ்டா ஸ்டோரி வைத்த பாக். கிரிக்கெட் வீரர்
ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதலில் பேருந்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் 41 பேர் பலத்த காயமுற்றனர்.
இந்த தாக்குதலில் சிக்கிய பேருந்து சிவகோரி கோவிலில் இருந்து வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ரியாசி பேருந்து தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹாசன் அலி கருத்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஹாசன் அலி தனது இன்ஸ்ட்டா பதிவில், “வைஷ்னவ தேவி தாக்குதல் மீது அனைவரின் பார்வை,” என்று குறிப்பிட்டுள்ளார். ஹாசன் அலியின் மனைவி சமியா இந்தியாவை சேர்ந்தவர் ஆவார்.
வேகப்பந்து வீச்சாளரான ஹாசன் அலி பாகிஸ்தான் அணிக்காக 24 டெஸ்ட், 66 ஒரு நாள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஹாசன் அலி இடம்பெறவில்லை.
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. இது வரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ரியாசி தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நபரின் படத்தை வெளியிட்ட ஜம்மு காஷ்மீர் காவல் துறை குற்றவாளி பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.