tech news
இனி மொபைல் நம்பருக்கும் தனி கட்டணம் செலுத்தனும் – டிராய்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மொபைல் மற்றும் லேண்ட்லைன் நம்பர்களை வைத்திருக்க தனி கட்டணம் வசூலிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
இதனை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் இந்தியாவில் மொபைல் எண் மற்றும் லேண்ட்லைன் எண் வைத்திருப்போர் அதற்காக தனி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
மொபைல் எங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை குறித்து கடந்த ஜூன் 6 ஆம் தேதி டிராய் சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கையின் படி மொபைல் எண் வைத்திருக்கும் மொபைல் ஆபரேட்டர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும். இதனை மொபைல் ஆபரேட்டர்கள் அவர்களின் பயனாளிகளிடம் வசூலித்து கொள்ளலாம்.
5G, மெஷின்-டு-மெஷின் தகவல் பரிமாற்றம், இன்டர்நெட் ஆப் திங்ஸ் சாதனங்கள் உள்ளிட்டவைகள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போதுள்ள மொபைல் எண் வழிமுறையை மாற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது .
புதிதாக அறிமுகம் செய்யப்படும் கட்டண முறை கொண்டு ‘வரையறுக்கப்பட்ட வளங்களை’ திறம்பட ஒதுக்கீடு செய்து, பயன்படுத்துதலை உறுதிப்படுத்த முடியும் என்று டிராய் நம்புகிறது.
மார்ச் 2024 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் மொத்தம் 119 கோடி டெலிபோன் சந்தாதாரர்கள் உள்ளனர். மார்ச் 2024 காலக்கட்டம் வரை இந்தியாவில் டெலி டென்சிட்டி எனும் நூற்றில் எத்தனை பேரிடம் மொபைல் சேவை உள்ளது என்ற சதவீதம் 85.69 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் புதிய எண்களை உருவாக்குவதற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே டிராய் சார்பில் கட்டண முறை கொண்டு வரப்படவுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட புதிய டெலிகாம் சட்டத்தில் மொபைல் நம்பர்களுக்கு கட்டணம் விதிப்பதை அனுமதிக்கிறது.
மொபைல் நம்பர்களுக்கு கட்டணம் விதிக்கும் முறை ஏற்கனவே ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, பிரிட்டன், லிதுவேனியா, கிரீஸ், ஹாங் காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போலாந்து, நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் அமலில் இருந்து வருகிறது.