Cricket
அவசர நிலை பிரகடனம்: டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறும் பாகிஸ்தான்?
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 8 சுற்றை நோக்கி செல்கிறது. இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.
ஆசியாவை சேர்ந்த பாகிஸ்தான் அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.
பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் சிறப்பாக ஆடிய அமெரிக்க அணி வரலாற்று வெற்றி பெற்று அசத்தியது.
அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது. மூன்றாவது போட்டியில் கனடா அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற இருக்கிறது. எனினும் போட்டி நடைபெற இருக்கும் போர்ட் லாடர்டேல் பகுதியில் பலத்த மழை காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
முன்னதாக இங்கு நடைபெற இருந்த முதல் போட்டியில் நேபால் மற்றும் இலங்கை அணிகள் மோத இருந்தன. எனினும் கனமழை காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டது. மேலும் இலங்கை அணி வீரர்கள் அந்த நகரத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.
போர்ட் லாடர்டேல் நகரில் உள்ள சென்ட்ரல் பார்வர்ட்-இல் இந்த வாரம் மிக முக்கிய போட்டிகள் நடைபெற உள்ளன . க்ரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் போராடி வருகின்றன.
அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் போட்டியில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோத உள்ளன . இந்த போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றாலோ அல்லது மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டாலோ அமெரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.
அமெரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். மழை காரணமாக போட்டி நடைபெறாத பட்சத்தில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அந்த வகையிலும் அமெரிக்கா அணி ஐந்து புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஒரு வேளை அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் வருகிற ஞாயிற்று கிழமை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று பாக்கிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.