Cricket
டி20 உலகக் கோப்பை: அமெரிக்க வீரருக்காக தவிர்க்கப்பட்ட இந்திய வீரர்?
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணிக்காக விளையாடி வரும் சௌரப் நெட்ராவல்கர் இந்தியா மற்றும் அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறார்.
லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சௌரப் நெட்ராவல்கர் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்து வீசிய சௌரப் தனது அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். இதே போன்று இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் இவர் அபாரமாக பந்து வீசினார்.
முதலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியை டக் அவுட் ஆக்கிய சௌரப் அடுத்து இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தியாவின் மும்பையில் பிறந்தவரும், மென்பொருள் பொறியாளருமான சௌரப் தனது வெறித்தனமான பந்து வீச்சு காரணமாக புகழ் பெற்று வருகிறார்.
அந்த வகையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். இந்திய அணிக்காக சிறப்பான பந்து வீச்சை கொடுத்து அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை அர்ஷ்தீப் சிங் வென்று இருந்தார்.
எனினும் அங்கு செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களின் சிலர் அர்ஷ்தீப் சிங்-ஐ தவிர்த்து அமெரிக்க வீரர் சௌரப் இடம் பேட்டி எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
போட்டி முடிந்த பிறகு சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்களை பேட்டி எடுக்க ICC அனுமதிக்கும். அந்த வகையில் கடந்த புதன் கிழமை சௌரப் பேட்டி கொடுக்க தயாராக இருந்தார்.
இதை தொடர்ந்து சௌரப் நெட்ராவல்கர் இந்தியா வீரர்கள் ரோகித் மற்றும் சூர்யா குமார் உடன் உரையாடினார்.