latest news
“வாய்ப்பில்ல ராஜா!” – மறுவாக்கு எண்ணிக்கை கோரிய விஜயபிரபாகரன்.. கைவிரித்த தேர்தல் ஆணையம்!
விருதுநகர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் விஜய பிரபாகரன் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்த விஜய பிரபாகரன், 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியைத் தழுவினார்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக விஜயபிரபாகரனின் தாயாரும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா குற்றம்சாட்டியிருந்தார். ’
இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இந்தநிலையில், வவிருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், தேர்தல் ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது என்றும் தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.