latest news
ஊரைக் காலி செய்து ஆந்திராவில் தஞ்சம் புகும் மக்கள்… ஏன் தெரியுமா?
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாம்புரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராம மக்கள் 600 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 5,700 ஏக்கரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவித்து அதற்கான பூர்வாங்க பணிகளைச் செய்து வருகின்றன. இதனால், தங்கள் வாழ்வாதாரமான விவசாய நிலங்கள் பறிபோகும் என்று கூறி நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி உள்ளிட்ட கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தினசரி இரவு நேரத்தில் ஊர் மைதானத்தில் கூடி தங்கள் எதிர்ப்புகளைக் காட்டி வருகிறார்கள். தொடர்ந்து 690-வது நாளாகப் போராடி வருகிறார்கள். இதனிடையே, முதற்கட்டமாக பொடாவூர், மகாதேவி மங்கலம், சிறுவள்ளூர், பரந்தூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள்.
ஆட்சேபனை இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி போராட்டம் 700-வது நாளை எட்ட உள்ள நிலையில், தமிழ்நாட்டை விட்டு மொத்தமாக வெளியேறி ஆந்திர மாநிலம் சித்தூர் ஆட்சியரை சந்தித்து தஞ்சம் கோர இருப்பதாக மக்கள் அறிவித்திருக்கிறார்கள்.