Connect with us

Cricket

இந்திய அணி பயிற்சியாளர் ஆகிறார் கவுதம் கம்பீர் – விரைவில் அறிவிப்பு?

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விரைவில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில், ராகுல் டிராவிட்-ஐ தொடர்ந்து புதிய தலைமை பயிற்சியாளர் ஆக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது டைனிக் பாஸ்கர் வெளியிட்டுள்ள புதிய தகவல்களில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஆக கவுதம் கம்பீர் நியமிக்கப்படுவது குறித்து பி.சி.சி.ஐ. சார்பில் வரும் நாட்களில் அறிவிக்கப்பட்டு விடும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கு கவுதம் கம்பீர் சில நிபந்தணைகளை வைத்ததாகவும், அதற்கு தற்போது பி.சி.சி.ஐ. சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதே தகவலை பி.சி.சி.ஐ. வட்டாரங்களை சேர்ந்த ஒருத்தர் தன்னிடம் தெரிவித்ததாக டைனிக் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

“இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராவது தொடர்பாக கவுதம் கம்பீரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். டி20 உலகக் கோப்பை நிறைவு பெற்றதும் ராகுல் டிராவிட்-க்கு மாற்றாக கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்வார்,” என்று பி.சி.சி.ஐ. சார்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலைமை பயிற்சியாளர் விவகாரத்தில் அணியின் உதவியாளர்களை தேர்வு செய்யவும் தனக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் வலியுறுத்தியதாகவும், இதற்கு பி.சி.சி.ஐ. சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

google news