World News
என்னையவா வேலையை வீட்டு தூக்குறீங்க… சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியர்!
தன்னை வேலையை விட்டு நீக்கிய சிங்கப்பூர் நிறுவனத்தின் சர்வர் டேட்டாவை அழித்த இந்தியாவைச் சேர்ந்த 33 வயது ஊழியருக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த என்.சி.எஸ் என்கிற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கந்தூலா நாகராஜூ என்கிற இந்தியர் பணிபுரிந்து வந்தார். பணியில் அவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றுகூறி கடந்த 2022 அக்டோபரில் அவரைப் பணியில் இருந்து நீக்கியது என்சிஎஸ் நிறுவனம்.
அதற்கு முந்தைய ஓராண்டாக என்சிஎஸ் நிறுவனத்தின் தர மேம்பாட்டுக் குழு உறுப்பினராக அவர் இருந்து வந்திருக்கிறார். நிறுவனம் சார்பில் உருவாக்கப்படும் புதிய சாப்ட்வேர்களை பரிசோதித்து, அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது நாகராஜூ இருந்த குழுவின் மேற்பார்வையில் நடந்து வந்திருக்கிறது.
இவர்கள் என்சிஎஸ் நிறுவனத்தின் தகவல்கள் சேமிக்கப்பட்ட சுமார் 180 சர்வர்களையும் பராமரித்து வந்திருக்கிறார்கள். தன்னை வேலையை விட்டு நீக்கியதில் அதிருப்தி அடைந்த நாகராஜூ, அந்த 180 சர்வர்களிலும் இருந்த தகவல்களை முற்றிலுமாக அழித்திருக்கிறார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்த நிறுவனம் அவர் மீது சிங்கப்பூர் போலீஸில் புகாரளித்திருக்கிறது.
இதை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் நாகராஜூவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. நாகராஜூவால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய என்சிஎஸ் நிறுவனத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.5.66 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.