Cricket
தப்பு நடந்துவிட்டது, ஒப்புக் கொள்கிறேன்.. பாபர் அசாம்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாடு காரணமாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி வெற்றியுடன் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.
இந்த போட்டியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “நான் இதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். எல்லோரும் எங்களின் செயல்பாடு குறித்து வருத்தம் அடைந்துள்ளனர். நாங்கள் ஒரு அணியாக விளையாடவில்லை. ஒரு அணியாக நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம், இதற்கு ஒரு தனிநபர் மட்டும் காரணம் கிடையாது.”
“அணியில் இருக்கும் ஒவ்வொருத்தருக்காக என்னால் விளையாட முடியாது. அணியில் 11 பேர் உள்ளனர். அவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட பணி உள்ளது. அதனாலேயே அவர்கள் உலகக் கோப்பை அணியில் உள்ளனர். நாங்கள் சரியாக செய்து முடிக்கவில்லை. இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். நாங்கள் ஒரு அணியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசி அந்த அணியை 106 ரன்களில் கட்டுப்படுத்தியது. பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மட்டும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது.