Cricket
பாக். கோச் ஒன்னும் மேஜிக் மேன் கிடையாது.. முன்னாள் வீரர் அதிரடி
2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது இடம் பிடித்த பாகிஸ்தான், நடப்பு உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று முடிவிலேயே தொடரில் இருந்து வெளியேறியது. இந்த முறை கோப்பையை வெல்ல பாகிஸ்தான் கடுமையான போட்டியாளராக இருக்கும் என்று அதிகம் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. எனினும், சூப்பர் ஓவரில் அமெரிக்க அணி வெற்றி பெற்று அசத்தியது. தனது இரண்டாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, இந்தியாவிடமும் தோல்வியை தழுவியது.
தொடர் தோல்விகளை அடுத்து, பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி கனடா மற்றும் அயர்லாந்து அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் எதிர்கொண்டது. இந்த இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு குறித்து அந்நாட்டின் முன்னாள் வீரர் டனிஷ் கனெரியா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம் தான். உங்களுக்கு இது ஏற்கனவே தெரிந்தது தான்.”
“நாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஏராளமான வீரர்கள் உள்ளனர். எனினும், அவர்கள் யாருக்கும் தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை. அகமது அஜ்மல் மற்றும் ஷாநவாஸ் தஹானி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சில காலம் முன்பு நீங்கள் புதிய பயிற்சியாளர், கேரி கிர்ஸ்டனை கொண்டுவந்தீர்கள். இவர் முன்னதாக இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்துள்ளார்.”
“இதைத் தொடர்ந்து சிறிது காலத்திலேயே அற்புதங்களை செய்ய அவர் ஒன்றும் மேஜிக் மேன் கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட் அரசியலால் நிறைந்துள்ளது. இதனை கேரி முதலில் நன்றாக புரிந்து கொண்டு, அதன்பிறகு தான் அவரால் தனது பணியை துவங்க முடியும்,” என்று தெரிவித்தார்.