latest news
மூடப்படாத பாதாள சாக்கடையில் தவறி விழுந்த பெண்!.. ஒப்பந்ததாரருக்கு அபராதம்…
தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் பாதாள சாக்கடைகள் செயல்பட்டு வருகிறது. சில சமயம் அவை சரியாக மூடமால் இருப்பதால் விபத்துக்கள் நடக்கிறது. சில சமயம் குழந்தைகளும் கூட அதில் தவறி விழும் அதிர்ச்சியான சம்பவமும் கூட நடக்கிறது. இது தொடர்பான செய்திகளும், வீடியோக்களும் அடிக்கடி வெளியாகியும் வருகிறது.
பாதாள சாக்கடையை மூடி போட்டு மூட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், பல இடங்களில் அதை யாரும் பின்பற்றுவதில்லை. கோயம்பத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள 100 அடி சாலையில் இரு புறங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் அந்த பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டு சில இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் திறந்தபடியே இருந்தது. இதுபற்றி அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்களும், பொதுமக்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், பாதாள சாக்கடைகள் மூடப்படவில்லை.
இந்நிலையில்தான் அந்த வழியாக சென்ற ஒரு பெண் ஒரு பாதாள சாக்கடையில் தவறி விழுந்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அப்பெண்ணின் கால் எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், ஒப்பந்ததரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக கோவை மாநகராட்சி ஆணையய் சிவகுரு பிரபாகரன் தெரிவித்திருக்கிறார்.