Cricket
ஒரு அளவுக்கு தான் ப்ரோ – ரசிகரை அடிக்க சென்ற ஹாரிஸ் ரௌஃப் விளக்கம்
பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரௌஃப் வீதியில் ரசிகர் ஒருவரை அடிக்க சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. வைரல் ஆன வீடியோவில் ரசிகர் ஒருவர் ஹாரிஸ் ரௌஃப்-இடம் ஏதோ கூறுகிறார். அதை கேட்ட ஹாரிஸ் உடனே கோபமுற்று ரசிகரை தாக்க விரைந்தார்.
ரசிகரை தாக்க சென்ற ஹாரிஸ்-ஐ அவரது மனைவி மற்றும் அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து ஹாரிஸ் ரௌஃப் மற்றும் ரசிகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஹாரிஸ் அந்த ரசிகரை பார்த்து- நீ இந்தியர் தானே? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரசிகர், தான் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ரசிகரிடம் கோபமுற்ற விவகாரம் குறித்து ஹாரிஸ் ரௌஃப் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். அதில், பிரபலங்களாக இருக்கும் போது எங்களுக்கு ஆதரவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் பொது மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால், மரியாதை கொடுக்க வேண்டியதும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பதிவில், “இந்த விவகாரத்தை சமூக வலைதளத்திற்கு கொண்டுவர வேண்டாம் என்றே நினைத்தேன். எனினும், வீடியோ வெளியாகிவிட்டதால், இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளிப்பதை அவசியமாக நினைக்கிறேன். பிரபலங்களாக இருப்பதால், பொது மக்களிடம் இருந்து அனைத்து விதமான கருத்துக்களையும் பெற்று கொள்ளும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.”
“அவர்கள் எங்களுக்கு ஆதரவாகவோ அல்லது விமர்சனங்களையோ வெளிப்படையாக தெரிவிக்கலாம். ஆனால், என் குடும்பம் அல்லது பெற்றோர் என வரும் போது, அதற்கு ஏற்ற வகையில் பதில் அளிக்க நான் தயங்க மாட்டேன். ஒருவர் எந்தவிதமான பணியில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் மரியாதை அளிக்க வேண்டியது முக்கியமான ஒன்று,” என்று குறிப்பிட்டுள்ளார்.