tech news
குறைந்த விலை ஆப்பிள் விஷன் ப்ரோ.. லீக் ஆன முக்கிய தகவல்
ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்- ஆப்பிள் விஷன் ப்ரோ கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகின் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் இந்த ஹெட்செட் விற்பனைக்கு வந்தது.
தொழில்நுட்ப உலகில் பேசுபொருளாக மாறிய ஆப்பிள் விஷன் ப்ரோ ஆரம்ப விலை 3499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2,90,000 ஆகும். ஆப்பிள் விஷன் ப்ரோ வெளியீட்டை தொடர்ந்து, இந்த ஹெட்செட்டின் மேம்பட்ட மாடல் அறிமுகம் பற்றிய தகவல்கள் வெளியாகின. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் விஷன் ப்ரோ 2 ஹெட்செட் உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விற்பனையில் உள்ள விஷன் ப்ரோ மாடல், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில், புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் உருவாக்கும் பணிகளில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த ஹெட்செட் அதன் விலைக்கு ஏற்றவாரு சற்றே குறைந்த வசதிகளை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
குறைந்த விலை விஷன் ப்ரோ மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும், அடுத்த ஆண்டு இறுதியில் இந்த மாடல் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ ஆப்பிள் நிறுவனம் ஸ்பேஷியல் கம்ப்யூட்டர் என்று அழைக்கிறது. இந்த ஹெட்செட் கொண்டு பயனர்கள் ஆக்மென்டெட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி சூழலில் செயலிகளை பயன்படுத்தி மகிழ முடியும்.