latest news
இது அரசின் அலட்சியம்!. கள்ளச்சாரய விவகாரத்தில் பொங்கியெழுந்த விஜய்!….
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில், சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகள் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகியவற்றில் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாரணையில் மெத்தனால் கலந்த சாராயத்தை அவர்கள் குடித்திருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பதற்கான மூலக்காரணத்தை ஆராய்ந்து அவற்றைக்கைப்பற்றி அழிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
ஒருபக்கம், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி வருகிற 22ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஒருபக்கம், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.